search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengaltheri Hill"

    • களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • செங்கல்தேரி வனப்பகுதி புலிகள் காப்பகத்தின் உள்மைய பகுதி என்றும், பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்குள்ள செங்கல்தேரி வனப்பகுதி புலிகள் காப்பகத்தின் உள்மைய பகுதி என்றும், பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய புலிகள் ஆணையத்தில் நேரடி கண்காணிப்பில் செங்கல்தேரி வனப்பகுதி இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் செங்கல்தேரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கும் அனுமதி கிடையாது. வனத்துறை ஊழியர்கள் மட்டுமே ரோந்து செல்வது வழக்கம்.

    அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க செங்கல்தேரியில் தானியங்கி காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட செங்கல்தேரி வனப்பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருப்பதாக மலையடிவார பகுதி கிராமமக்கள் பெருமளவில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    செங்கல்தேரி வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடும். மேலும் அப்பகுதியில் வைரக்கற்களும் உள்ளன.

    எனவே வைரக்கற்களை கொள்ளையடிக்கவோ அல்லது யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வன வளங்களை திருடும் முயற்சியில் அக்கும்பல் நடமாடுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை வனத்துறையினர் மறுத்து வந்தனர்.

    இதனிடையே தடை செய்யப்பட்ட செங்கல்தேரி வனப்பகுதியில் அந்நியர் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ளவர்களை பார்க்கும் போது அவர்கள் வனத்துறை ஊழியர்களோ, ஆராய்ச்சியாளர்களோ இல்லை என்பது தெரிகிறது.

    அந்த கும்பல் இரவு நேரங்களிலும் வனப்பகுதியில் தங்கியுள்ள படங்களையும் வெளியிட்டுள்ளது. இரவில் அங்கு தங்க வேண்டியதன் மர்மம் என்ன? என்பது தெரியவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கல்தேரி செல்லும் பாதையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது இன்று வரை அடையாளம் காணப்படவில்லை.

    இதுகுறித்து களக்காடு கோவில்பத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரத்னகுமார் கூறுகையில், இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். களக்காடு மலையில் உள்ள வன வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் போராடி வரும் நிலையில் வனத்துறையினர் அதனை அழிக்கும் முயற்சியில் இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுவது உள்ளூர் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

    ×