search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidates cost"

    5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரூ.14 ஆயிரம் கோடி வரை செலவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. #Election2018
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து சி.எம்.எஸ். எனப்படும் ‘சென்டர் பார் மீடியா’ கல்வியகம் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

    அதில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரூ.14 ஆயிரம் கோடி வரை செலவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இவற்றில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஓட்டுக்கு குறைந்தது ரூ.500 முதல் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலை ஒப்பிடும் போது 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கட்சி வேட்பாளர்களிடம் இருந்து ஓட்டுக்கு பணம் பெற்றுள்ளனர்.

    கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு 25 சதவீதம் பேர் மட்டுமே பணம் பெற்றனர். 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் ஓட்டுக்கு பணம் வாங்க தொடங்கினார்கள்.


    தற்போது 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 50 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கியுள்ளனர்.

    இந்த தகவலை சி.எம்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர் என்.பாஸ்கரராவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “தற்போது ‘நோட்டுக்கு ஓட்டு’ என்ற கொள்கை வாக்காளர்களிடம் பரவி வருகிறது. தெலுங்கானாவில் மட்டும் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு ரூ.150 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது மற்றும் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    அனைத்து ஊழல்களுக்கும் தாயாக தேர்தல் ஊழல் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர். அதுவே ஊழல் மற்றும் முறைகேடுக்கு காரணமாக திகழ்கிறது.

    தேர்தல் செலவை குறைக்க அதிக பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்க கூடாது. தேர்தல் நடைமுறையை 15 நாட்களாக குறைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். #Election2018
    ×