search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus stations"

    • மதுரை நகரில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் 3 பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்கள் குறிப்பிடத்தக்கவை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் பெங்களூரு, ஆந்திரா சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோல ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய 2 பேருந்து நிலையங்கள், 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். அங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.

    மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் தவிர 10-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் உண்டு. இங்கு இருந்து நகர் மற்றும் கிராமங்களுக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது கிராமப்புறங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

    மதுரை மாநகர பஸ் நிலையங்களில் பனகல் சாலை, கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இங்கு இருந்து நாள்தோறும் சுழற்சி அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது மிகக் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே அங்கு பொதுமக்கள் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், கே.புதூர் மற்றும் ஆனையூர் ஆகிய 3 பஸ் நிலையங்களில் பொதுமக்களின் வருகை குறைவு காரணமாக, அவை உரிய முறையில் பராமரிக்கப்படுவது இல்லை. எனவே மேற்கண்ட பஸ் நிலையங்கள் பராமரிப்பு இன்றி சீர்குலைந்து காட்சி அளிக்கின்றன. அங்கு மினி பஸ்களையே அதிகம் பார்க்க முடிகிறது.

    தல்லாகுளம் பனகல் சாலையில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இது மதுரை அரசு மருத்துவமனைக்கு மிகவும் அருகில் உள்ளது. இதனால் வெளியூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இந்த பஸ் நிலையம் பயனுள்ளதாக இருந்தது.

    எனவே அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் மினி பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோ மூலம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது.

    மதுரை அழகர் கோவில் சாலையில் கே.புதூர் பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து மேலூர், அழகர் கோவில் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு 15-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இங்கு தற்போது 5-க்கும் குறைவான பஸ்களை புறப்பட்டு செல்கின்றன.

    ஆனையூர் பஸ் நிலையத்தில் இருந்தும் திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகரங்களுக்கு 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது அங்கு இருந்து 5 பேருந்துகள் புறப்பட்டு போனால் அதிர்ஷ்டம் என்ற நிலை தான் உள்ளது. ஆனையூரில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கின்றன. இதற்கான கட்டுமான பொருட்களை சேகரித்து வைக்கும் தளமாக ஆனையூர் பஸ் நிலையம் மாறி உள்ளது.

    மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதுவும் தவிர உபரி பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

    எனவே மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது குறைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    ×