search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Botanical Gardens Ooty"

    • ஏப்ரல் 2-வது வாரத்தில் பூங்காவில் பூக்கள் பூத்து குலுங்கும்.
    • கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    ஊட்டி

    ஊட்டியில் பனி குறைந்துள்ள நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த கண்காட்சி நடத்துவதற்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், மலர் நாற்றுக்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மலர் நாற்றுகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு அரண் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

    தற்போது ஊட்டியில் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளதால் தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் இந்த தொட்டிகளில் மக்களின் மனங்களை கவரும் வகையில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். 

    • ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
    • ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    குறிப்பாக கோடை விடுமுறை, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    கடந்த 13-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். நேற்று காணும் பொங்கலையொட்டி அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்.

    புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கொடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, லேம்ஸ்ராக் காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்பட மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.

    தொடர் விடுமுறை நேற்றுடன் முடிந்ததால் மதியத்திற்கு பிறகு சுற்றுலா தலங்களில் கூட்டமானது குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பஸ் நிலையங்களிலும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

    ×