search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "border wall"

    அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே புதிய உடன்பாடு ஏற்பட்டது. #USMexico #BorderWall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் ஜனாதிபதி டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினர் மறுத்ததால், பல்வேறு அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுத்துறைகள் முடங்கின. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக 35 நாட்களுக்கு மேல் அரசுத்துறைகள் முடக்கம் நீடித்தது.

    பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சமீபத்தில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் வருகிற 15-ந் தேதி காலாவதியாகிறது. இந்த நிலையில் மீண்டும் அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே நேற்று நீண்டதொரு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் இந்த உடன்பாட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் இல்லை.

    அதே சமயம் இந்த உடன்படிக்கையை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
    35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் நேற்று முன்தினம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. #DonaldTrump #US-Mexico #BorderWall
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

    அண்டை நாடான மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் நுழைகிறவர்களை தடுக்கிற விதத்தில் எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவுத்திட்டம். அதுமட்டுமின்றி இது அவரது தேர்தல் வாக்குறுதியும் ஆகும்.

    இந்த தடுப்புச்சுவர் கட்ட மெக்சிகோ பணம் தர மறுத்து விட்ட நிலையில், உள்நாட்டு நிதி 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரத்து 540 கோடி) வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால் ஜனநாயக கட்சி, டிரம்பின் இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தை, தடுப்புச்சுவர் கட்ட வழங்க முடியாது என்று அந்த கட்சி கூறுகிறது.



    இதன்காரணமாக செலவின மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றிய டிரம்ப் அரசால், செனட் சபையில் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால், அவை கடந்த மாதம் 22-ந் தேதி முதல் முடங்கின.

    அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் அரசுத்துறைகள் முடங்கியது, இதுவே முதல்முறை என சொல்லப்படுகிறது. அரசுத்துறைகளின் முடக்கம் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமார் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் 35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் நேற்று முன்தினம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக ஒரு ஒப்பந்தத்துக்கு டிரம்ப் உடன்பட்டார்.

    இதன்படி அரசுத்துறைகள் 21 நாட்கள் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் (அடுத்த மாதம் 15-ந் தேதி வரை) தற்காலிக செலவின மசோதா, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு டிரம்ப் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

    இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த முடிவு, எந்த விதத்திலும் சலுகை இல்லை. அரசுத்துறைகள் முடக்கத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான லட்சக்கணக்கான மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது. எல்லைச்சுவர் விவகாரத்தில் மக்கள் எனது வார்த்தைகளுக்கு செவிகொடுப்பார்கள் என கருதுகிறேன். இதில் 21 நாட்களில் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், மீண்டும் அரசுத்துறைகள் முடங்கும்” என கூறி உள்ளார்.

    அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது பிப்ரவரி 15-ந் தேதி வரையிலான அரசுத்துறைகளின் தேவைக்கு நிதி அளிக்கும். அரசியல் குழப்ப நிலையால், மத்திய அரசு ஊழியர்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். அவர்கள் தேசபக்தர்கள். அவர்களுக்கு முழுச்சம்பளமும் தரப்படும்” என கூறினார்.

    அதேநேரத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கும் வலிமை வாய்ந்த மாற்றுத்திட்டத்தை நான் இன்னும் கையில் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் மூலம் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியை அவர் எல்லைச்சுவர் கட்டுவதற்கு பயன்படுத்த முடியும். ஆனால் அது அரசியல் சாசன ரீதியிலும், சட்ட ரீதியிலும் சவால்களாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடைசியாக, “ எல்லையில் பலமிக்க சுவர் அல்லது உருக்கிலான தடையை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை” என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    மெக்சிகோ எல்லைப்பகுதியின் குறுக்கே 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்டும் அதிபர் டிரம்ப் திட்டத்துக்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. #USHouse #Trump #mexicoborderwall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இருநாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றநிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் கடந்த ஆண்டு டிரம்ப் கையொப்பமிட்டார். 

    அதுமட்டுமின்றி, இந்த தடுப்புச்சுவர் கட்டுவதற்கான பணத்தை மெக்சிகோ தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    ஆனால், அதை மெக்சிகோ நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கருத்து தெரிவிக்கையில், “சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது” என முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த திட்டத்துக்காக தேவைப்படும் நிதியில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான விவாதத்தின்மீது பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த 217 உறுப்பினர்களும் எதிராக ஜனநாயக கட்சியை சேர்ந்த 185 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    எனினும், டிரம்ப்பின் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற மேல்சபையில் நாளை இதுதொடர்பாக நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அவருக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

    மதில் சுவர் கட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகையை முடக்கினால் அமெரிக்க அரசின் பிற முக்கிய துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற காரணத்தை முன்வைத்து மதில் சுவருக்கான நிதி ஒதுக்கீட்டை மேல்சபையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. #USHouse #Trump #mexicoborderwall
    ×