search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW 620D Gran Turismo"

    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. அசத்தல் அம்சங்கள் நிறைந்த 620டி கிரான் டுரிஸ்மோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #BMW



    ஆடம்பர சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் புதியதாக 620டி கிரான் டுரிஸ்மோ என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் வரிசையில் இது அறிமுகமாகி இருக்கிறது. ட்வின் டர்போ தொழில்நுட்பத்தை கொண்ட புதிய கார் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. 

    மிகச் சிறப்பான வடிவமைப்பு, சவுகரியமான இடவசதி, நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு ஏற்படாத தன்மை இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இந்த மாடல் கார்கள் சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் தயாரானது. சொகுசு ரக செடான் காரில் இது மிக முக்கியமானதாக இடம்பெறும். 

    டீசல் என்ஜினைக் கொண்டிருந்தாலும் இது அதிர்வில்லாத சொகுசான பயணத்தை தரும். இந்தியாவில் இதன் விலை ரூ.63.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மினரல் ஒயிட், கிளேசியர் சில்வர், மெடிட்ரேனியன் புளூ, பர்கண்டி ரெட் உள்ளிட்ட நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது.

    இதன் உள்புறம் சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காக மென்மையான தோலினால் ஆன இருக்கைகள், மாற்று வண்ணங்களில் இருப்பது இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது. பின்இருக்கையில் பயணிப்பவர்கள் மிகவும் சவுகரியமாக அமரும் வகையிலும், கால்களை நீட்டிக் கொள்ளும் வகையில் இடவசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. உயரமானவர்களும் வசதியாக அமரும் வகையில் தலைப் பகுதி மேற்கூரையில் இடிக்காத வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளது. 



    இரு பகுதிகளாக விரிவடையும் மேற்கூரை, பின்னிருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். பயணத்தின்போது படங்களை பார்த்து ரசிக்க ஏதுவாக 10.2 இன்ச் அளவில் இரண்டு திரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள புளூரே பிளேயர், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய ஹெச்.டி.எம்.ஐ. இணைப்பு வசதி, எம்.பி.3 பிளேயர் மற்றும் கேம் கன்சோல் ஆகியவற்றை வழங்குகிறது.

    இந்த காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்துகிறது. இது மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 7.9 விநாடிகளில் எட்டிவிடும். இதில் 8 ஸ்டெப்ரோடானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு வசதிக்கு இதில் 6 ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளன. ஏ.பி.எஸ்., டி.எஸ்.சி. உள்ளிட்டவற்றோடு டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் டெசன்ட் கண்ட்ரோல், பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு, டயர்களில் காற்று முழுவதும் இறங்கினாலும் ஓடக்கூடிய வசதி, விபத்து உணர் சென்சார் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

    டிஸ்பிளே சாவி, காரினுள் நுழையும்போது தரைப்பகுதி விளக்கு, 10 அங்குல தொடுதிரை, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்துடன் ரியர் வியூ கேமரா, பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல், பி.எம்.டபுள்யூ. செயலி மூலம் இணைப்பு ஆகியன இதில் உள்ளன.
    ×