search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bear movements"

    • பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந் தேதி புகுந்த கரடி 3 பேரை பயங்கரமாக கடித்து தாக்கியது.
    • இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந் தேதி புகுந்த கரடி 3 பேரை பயங்கரமாக கடித்து தாக்கியது.இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    அதன் பின்னர் அந்த கரடி வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது.

    மீண்டும் கரடி நடமாட்டம்

    இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நெல்லை கள இயக்குனர் பத்மாவதி உத்தரவின் பேரில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா அறிவுறுத்தலின்படி, கடையம் வனச்சரகர் கருணா மூர்த்தி தலைமை யில் 48 பேர் கொண்ட குழு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வனத்துறையினர் நடவடிக்கை

    அவர்கள் கரடி ஊருக்குள் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினர் மண்எண்ணை நிரப்பிய தீப்பந்தம் கொண்டும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பிளாஸ்டிக் துப்பாக்கி மற்றும் ஒலி எழுப்பான் மூலமாகவும் சத்தத்தை எழுப்பி வருகின்றனர். மேலும் சைக்கிள் டயர்களில் தீ வைத்தும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    எனினும் கரடி நடமாட்டம் குறித்து தடயங்கள் சிக்கவில்லை. இதுதொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கூறியதாவது:-

    48 பேர் குழு

    வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவல் குழுவினர் அடங்கிய 48 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக கரடி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

    சம்பந்தப்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரடி வரும் வழித்தடங்களும் கண்கா ணித்து வருகிறோம். இதுவரை கரடி வந்ததற்கான கால் தடங்கள் கிடைக்கவில்லை. காமிரா காட்சிகளிலும் கரடியின் உருவம் பதிவாகவில்லை.

    எனினும் முன் எச்சரிக்கை காரணமாக பொது மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கரடி நடமாட்டம் கண்டறியப் பட்டால் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். பொது மக்கள் கரடி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×