search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM breaking robbery attempt"

    குடியாத்தம் அருகே ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கீழ் ஆலத்தூரில் காட்பாடி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏ.டி.எம். உள்ளது. நள்ளிரவில் கொள்ளை கும்பல், ஏ.டி.எம். மையத்திற்கு கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

    ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து, பணம் இருக்கும் லாக்கரை கடப்பாரையால் தாக்கி உடைக்க முயன்றனர். லாக்கரை நீண்ட நேரமாக முயற்சித்தும் உடைக்க முடியவில்லை. கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. இன்று காலை ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்ததையறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி. பிரகாஷ் பாபு மற்றும் கே.வி.குப்பம் போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். ஏ.டி.எம்.மில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றினர்.

    அதில், பதிவாகி உள்ள கொள்ளையர்களின் உருவம் மற்றும் அடையாளங்களை வைத்து அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை.

    கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு வேலூர் மேல்மொணவூர் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மற்றும் காட்பாடி திருநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.9 லட்சத்தை கும்பல் கொள்ளையடித்தனர்.

    ஆம்பூர் அடுத்த மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏ.டி.எம்.மையும் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

    ஒடுகத்தூர் மற்றும் அணைக்கட்டு காந்திநகரில் உள்ள 2 ஏ.டி.எம்.களிலும் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

    இதுபோன்று தொடர் வங்கி, ஏ.டி.எம். கொள்ளையை தடுக்க இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் விதித்தனர். ஆனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள பல வங்கி, ஏ.டி.எம்.களில் காவலாளிகள் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை கடை பிடிக்காத வங்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். #Tamilnews
    ×