search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andipatti Meenakshi sundareshwar Temple"

    • சூரியனும், சந்திரனும் இங்கு அருகருகே அருள் பாலிக்கின்றனர்.
    • இங்கு தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும்.

    சித்தர்கள் வாழ்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது.

    சூரியனும், சந்திரனும் இங்கு அருகருகே அருள் பாலிக்கின்றனர்.

    இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர்.

    சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால், இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கோவிலாகும்.

    எனவே இத்தலத்தை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்குமாம்.

    இத்தல விநாயகரின் திருநாமம் "கோடி விநாயகர்" என்பதாகும்.

    இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும்.

    பழநி திருவாவினன் குடியை போலவே இங்கும் முருகன் வடக்கு பார்த்த மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    இந்த முருகனை தரிசித்தால் பழனி முருகனை தரிசித்தபலன் கிடைக்கும்.

    இந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும்.

    இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் கோவிலிலும் காணலாம்.

    குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்வதற்கு நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும், குழந்தை பிறந்து பிறந்து இறக்கும் குடும்பத்தாரின் குறை தீர்ப்பதற்காக ஒருசில கோயில்களே உள்ளது.

    அதில் முதன்மையான கோயில் இது. குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுவது சிறப்பு.

    குடும்பத்தில் ஒற்றும் ஏற்படும் பிரிந்த உறவுகள் கூடி வருவார்கள்.

    தீராத வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு தினமும் மாலை வேளைகளில் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.

    உணவு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும், உணவு செரிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும், இங்குள்ள சிவனுக்கு சுத்தன்னம் நைவேத்தியம் படைத்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.

    ஆண்டிபட்டியை சுற்றி யுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்கும்.

    மதுரை மீனாட்சி கோவில் போல், மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

    மன அமைதி வேண்டுபவர்கள், தியானம் செய்பவர்கள், யோகாசனம் பயில்பவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

    பல காலகட்டத்தில் பல சித்தர்கள் ஆண்டிகள் வேடத்தில் இங்கு தங்கியிருந்தனர். இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.

    இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார்.

    இவரது ஜீவ சமாதி இங்குள்ளது. இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது.

    தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தல விருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

    பஞ்சம்,பட்டினியின்றி ஊர் செழிப்புடன் வாழ, வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வெள்ளி வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் எந்தவித குறைபாடும் இன்றி திருப்தியாக வாழலாம் என்பதால் சுற்றியுள்ள ஊர்மக்களில் பெரும்பாலானோர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

    ×