search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhiyur Selvaraj MP"

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகில் நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேசியதாவது :- இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தி.மு.க.வின் முதன்மை கொள்கையாகும். இந்தி எதிர்ப்பு போராட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்தியை மக்களிடம் திணிக்கக்கூடாது. இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் குலக்கல்வி திட்டத்தை புகுத்தும் வகையில் பாடங்கள் அமைந்துள்ளது.

    இந்தியை எந்த காலத்திலும் திணிக்க அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார். கனமழை பெய்தபோதும் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார். தொழில் நகரான திருப்பூரில் நூல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நூல் விலை படிப்படியாக குறைந்து தொழில் நடக்கிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்ல இப்போது இருந்தே பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், தெற்கு மாநகர பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகிகள் திலகராஜ், சிவபாலன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×