search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Association Leader"

    ஈரோடு சென்னிமலை அருகே சுதந்திர தினம் அன்று ஈ.வெ., ராமசாமி தேசியக்கொடியை எரித்த தற்சார்பு விவசாய சங்க தலைவர் கைதுக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த பசுவபட்டி பகுதியை சார்ந்தவர் பொன்னையன் (வயது 62). இவர் தற்சார்பு விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

    இவர் கடந்த ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் அன்று முகநூலில் ஈ.வெ., ராமசாமி தேசியக்கொடியை எரிப்பதை போல படம் வெளியிட்டிருந்தார்.

    இதனையடுத்து ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சிவசுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட எஸ்.பி சக்தி கணேசனிடம் இது குறித்து புகார் செய்திருந்தார். அதில் சமூக வலைதளங்களில் தற்சார்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தேசிய கொடியை தீ வைத்து எரிப்பது போல பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது தேசதுரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்நிலையில் சென்னிமலை இன்ஸ்பெக்டர் பொன்னையன் மீது இரண்டு பிரிவுகளில் (153,504),சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, தேசிய சின்னங்களை அவமதிப்பது ஆகிய 2 பிரிவுகளில் தேச விரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கைது நடவடிக்கைக்காக பசுவபட்டியில் உள்ள பொன்னையன் வீட்டுக்கு சென்றார். அவர் வீட்டில் இல்லாததால் தேச விரோத வழக்கின் கீழ் பொன்னையனை கைது செய்ய தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னிமலை போலீசார் அவரை கைது செய்து பெருந்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது காவல் நிலைய பிணையிலேயே விடுவிக்கலாம் என நீதிபதி குமாரவர்மன் கூறினார். ஆனால் அரசுதரப்பு வழக்கறிஞர் பொன்னையன் வெளியே வந்தால் ஆர்ப்பாட்டம், போராட்டம் என பொது அமைதிக்கு ஊறுவிளைவிப்பார் என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதனால் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி குமாரவரமன் உத்தவிட்டார். இதனையடுத்து பொன்னையன் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×