search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional seat"

    பாஜகவிற்கு சற்று பின்னடைவாக உள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு கூடுதலாக மத்திய மந்திரி பதவிகளை வழங்க பிரதமர் மோடி தீர்மானித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றிருக்கிறது.

    மேற்குவங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பா.ஜனதா கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.

    மேற்குவங்காளத்தில் 18 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதேபோல ஒடிசாவிலும் 8 இடங்களில் வென்றுள்ளது. அங்கு இதற்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த இரு மாநிலங்களிலும் இன்னும் ஆழமாக காலூன்றி வரும்காலத்தில் மாநில ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பா.ஜனதாவின் திட்டமாக உள்ளது.



    அதேபோல கேரள மாநிலத்திலும் பா.ஜனதா வலுவாக காலூன்ற முடியும் என்று நம்புகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அங்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனாலும் பல தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.

    எனவே இன்னும் அதிக கவனம் செலுத்தினால் கேரளாவிலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது.

    இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த தடவை கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். தற்போது மேற்குவங்காளத்தை சேர்ந்த பாபுல்சுப்ரியோ, எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இப்போது 18 இடங்களை கைப்பற்றி இருப்பதால் அங்கு கூடுதலாக மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    2021-ல் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்கி மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது.

    ஒடிசாவில் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 8 இடங்களை கைப்பற்றி மாநிலத்தின் 2-வது பெரிய சக்தி என்பதை பா.ஜனதா நிரூபித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று கருதுகிறது. இதனால் அங்கும் கூடுதல் மந்திரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    கேரளாவில் கடந்த 2014 தேர்தலிலும் ஒரு இடமும் பா.ஜனதாவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன் தானத்தை ராஜஸ்தான் மேல்சபை எம்.பி. ஆக்கி மந்திரி பதவி வழங்கினார். இன்னும் அவருடைய எம்.பி. பதவி காலம் உள்ளது. எனவே அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    இவர் தவிர இன்னும் ஒருவரை மந்திரியாக்கலாம் என்ற திட்டம் பா.ஜனதாவுக்கு உள்ளது. கேரள மாநில பா.ஜனதா தலைவர் முரளிதரன் மகாராஷ்டிர மாநில மேல்சபை எம்.பி.யாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் வேறு ஒரு நபரை மந்திரியாக்கி பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தில் மேல்சபை எம்.பி. ஆக்கும் திட்டமும் உள்ளது.

    2021-ல் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மத்திய மந்திரி பதவியை அதிகமாக வழங்கி கூடுதல் கவனம் செலுத்தினால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சில இடங்களை கைப்பற்ற முடியும் என்று கருதுகிறார்கள்.

    கடந்த மந்திரிசபையில் சிவசேனாவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது 2 மந்திரி பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 மந்திரி பதவி வழங்க உள்ளனர்.

    தற்போது உள்ள மந்திரி சபையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மந்திரியாக உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் ஜிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் கேட்கிறார்.

    ஆனால் ராம்விலாஸ் பஸ்வானே மந்திரி பதவியில் தொடர வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. அசாம் மாநிலத்தில் விரைவில் 2 எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அதில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு ஒரு எம்.பி. பதவியை ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொடுத்து அதன் மூலம் அவரை மந்திரியாக தொடர வைக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.
    ×