search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "800 Buildings"

    • திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது.
    • உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மானத்தில், பனியன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் 2 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்தநிலையில் வளர்ந்து வரும் நகரப்பகுதியில் வீடு, கடைகள் மின் இணைப்பு கிடைக்காமல் தத்தளித்து வருகின்றன.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகரப்பகுதியில் மின் இணைப்பு பெறுவது சவாலாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான கடைகளுக்கு இணைப்பு பெற முடியவில்லை. வீட்டு இணைப்பாக இருந்தால் மாதம் 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்துவோம். தற்காலிக இணைப்பில் 5000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பணி நிறைவு சான்று கிடைக்காததால், மக்களுக்கு நஷ்டம். மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. தமிழக அரசு தலையிட்டு வணிக வளாகம், வீடுகள் மின் இணைப்பு பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்றனர்.

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர், முதல்வருக்கு அனுப்பிய மனுவில், பணி நிறைவு சான்று கிடைக்காமல் திருப்பூரில் மட்டும் வீடுகள், கடைகள் என 800 கட்டடங்கள் மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளன.தற்காலிக மின் இணைப்பை பயன்படுத்துவதால், மின் கட்டணமாக 200 முதல் 400 ரூபாய்க்கு பதிலாக, 4,000 ரூபாய் வரை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கூறுகையில்,மாநகராட்சி வார்டுகளில், கட்டுமான பணி நிறைவடைந்தது என விண்ணப்பித்தால் கள ஆய்வு நடத்தி பணி நிறைவு சான்று வழங்கப்படும். சான்று வழங்குவதில் எவ்வித குழப்பமோ, தயக்கமோ இல்லை. இதுவரை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்என்றார்.

    மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு கூறியதாவது:-

    கடந்த 2019 முதல் மின் இணைப்பு வழங்க, உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயமாகியுள்ளது. மூன்று குடியிருப்புகள் வரை கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதிலும் கட்டிடத்தின் மொத்த உயரம், 12 மீட்டருக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.மற்ற வீடுகள், கடைகள், தொழிற்சாலை கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் தேவை. உள்ளாட்சி அமைப்புகளிடம் பெறும் கட்டிட உரிமத்தில் உள்ளபடியே கட்டடம் அமைந்துள்ளது என்பதை உறுதி செய்யவே பணி நிறைவு சான்றிதழ் கேட்கிறோம். பணி நிறைவு சான்றிதழ் இல்லாவிட்டால் மின் இணைப்பு வழங்க இயலாது.

    ×