search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "60 Lakh Fake Voters"

    மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது. #MadhyaPradesh #FakeVoters
    புதுடெல்லி:

    பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பட்டியலில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

    எனவே இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த போலி வாக்காளர் பட்டியலையும் அவரிடம் ஒப்படைத்த காங்கிரசார், அதை மறு ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

    தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும், போலி வாக்காளர்களை சேர்க்க உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர்கள், இத்தகைய அதிகாரிகளுக்கு, அடுத்த 6 முதல் 10 ஆண்டுகள் வரை தேர்தல் பணிகளில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    இந்த மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல்நாத் கூறியதாவது:-

    மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பதற்கான ஆதாரத்தை தேர்தல் கமிஷனில் அளித்து இருக்கிறோம். இந்த பெயர்கள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதேயன்றி, தொழில்நுட்ப தவறு அல்ல.

    மாநில அரசு தனது சொந்த லாபத்துக்காக இத்தகைய கீழ்த்தரமான செயல்களை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வருகிறது. 10 ஆண்டுகளில் 24 சதவீதமே மக்கள் தொகை அதிகரித்து இருக்கும் நிலையில், வாக்காளர் எண்ணிக்கை மட்டும் எப்படி 40 சதவீதம் அதிகரிக்கும்?

    எனவே இந்த வாக்காளர் பட்டியலை அங்கீகரித்த ஒவ்வொரு அதிகாரியிடம் இருந்தும் அறிக்கை பெற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அத்துடன் மத்திய பிரதேசத்தின் அண்டை மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டோம்.

    இவ்வாறு கமல்நாத் கூறினார்.

    காங்கிரசாரின் புகாரை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 குழுக்களை மத்திய பிரதேசத்துக்கு தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்தது. போலி வாக்காளர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தும் இந்த குழுவினர், தங்கள் அறிக்கையை 7-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.  #MadhyaPradesh #FakeVoters
    ×