என் மலர்
வழிபாடு

weekly rasipalan 1.3.2026 to 7.3.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- மிதுனம் திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம்.
- கடகம் இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய வாரம்.
மேஷம்
முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது மேஷ ராசிக்கு இழந்த இன்பங்களை மீட்டுத் தரும் காலமாகும். ராசி அதிபதியுடன் ராகு சேர்வது மறைமுக சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். இந்த கிரகச் சேர்க்கைக்கு குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.
சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியம் உள்ளது. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டும். பெண்களுக்கு சொத்துக்கள் மற்றும் சொந்தங்களால் நிம்மதி கூடும். தடைபட்ட புத்திர பாக்கியம் சித்திக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் நீங்கும். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.
ரிஷபம்
உழைப்பிற்கான அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய அற்புதமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார். அங்கு ஏற்கனவே சஞ்சரிக்கும் சனியுடன் சேர்க்கை பெறுகிறார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்கள் ஜாதகருக்கு வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து இன்பங்களையும் ஏற்படுத்தித் தரும். எண்ணங்கள் விருப்பங்கள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் பூர்த்தியாகும். தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.
பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். அனைத்து பாக்கியங்களும் தேடி வரும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிறிய தொகை கடன் வாங்க நேரும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். தாய்வழிச் சொத்தில் மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு. சந்திர கிரகணத்தன்று வெளி உணவுகளை தவிர்க்கவும்.
மிதுனம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம். ராசி அதிபதி புதன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் வக்ர கதியில் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு கிடைக்கும். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வருமா என அதிர்ஷ்டத்தைத் தேடி காலம் தள்ளுவீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயோதிகர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணியில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் போது முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். சந்திர கிரகணத்தன்று பச்சை பயிறு தானம் வழங்கவும்.
கடகம்
இறைவழிபாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டிய வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை. ஆனால் ராசிக்கு இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைக்கவும். யாரையும் சபிக்க கூடாது.
நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால், வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றிய முடிவு எடுக்க சாதகமான காலம். முக்கிய விஷயங்களில் மேலிடத்தின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். அடிப்படை வசதியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும். சந்திர கிரகணத்தன்று மவுன விரதம் இருப்பது நல்லது.
சிம்மம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரம். சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. விரயாதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் தடை தாமதங்கள் இருக்கும்.
சுய கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. பெண்கள் வீட்டிற்கு தெரியாமல், நகை சீட்டு, ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சந்திர கிரகணத்தன்று மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.
கன்னி
சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு ஆறாம் இடத்தில் வக்ரகதியில் செவ்வாய், சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து உள்ளார். பெண்களுக்கு வேலையில் விரும்பிய சலுகைகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம்.
வீடு, மனை, திருமணம், மகப்பேறு ஆகியவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள். வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. சந்திர கிரகணம் முடிந்த பிறகு மகாவிஷ்ணுவை வழிபடவும்.
துலாம்
வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு ஆறாம் இடத்தில் உச்சம் அடைகிறார். மருத்துவம், ராணுவம், அரசியல், அரசாங்கம், ஜோதிடம் போன்ற துறையில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். பெயர் புகழ் அந்தஸ்து கவுரவம் உயரக்கூடிய நேரம். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும்.
இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த துலாம் ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும். சந்திர கிரகணத்தன்று உணவு உடை தானம் வழங்கவும்.
விருச்சிகம்
சுபிட்சமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்கு செல்கிறார். இதுவரை வெளியே தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். பய உணர்வும், கலக்கமான மனநிலையும் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும்.
பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும். பேச்சால் வீண் பிரச்சனை ஏற்படும் என்பதால் தேவையில்லாத பேச்சினைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். திருமண வயதினருக்கு ஓரிரு மாதங்களில் திருமணம் நிச்சயிக்கப்படும். சந்திர கிரகணத் தன்று சிவபுராணம் படிக்கவும்.
தனுசு
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். தனுசு ராசிக்கு 6,11-ம் அதிபதியான சுக்ரன் ராசிக்கு 4ல் உச்சம் பெறுகிறார். சொத்துக்களை விற்று கடன் அடைக்கும் முயற்சிகள் சித்திக்கும். பண நெருக்கடிகள் அகலும். பணிபுரி பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு உண்டு. தொழிலில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். நல்ல புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிலவிய நெருக்கடிகள் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும்.
குடும்ப தேவைகள் நிறைவேறும். தாய், தந்தையே தெய்வம் என்ற உணர்வு மேலோங்கும். தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பிணக்குகள் சீராகும். அதிர்ஷ்டம், லாட்டரி, போட்டி பந்தயங்கள் சாதகமாகும். 2.3.2026 அன்று காலை 7.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். சந்திர கிரகணம் முடிந்த பிறகு சிவ வழிபாடு செய்யவும்.
மகரம்
கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சிற்கு குடும்ப உறுப்பினர்கள் மதிப்பு கொடுப்பார்கள். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும்.
பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். அஷ்டம கேதுவால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய முடியும். வைத்தியச் செலவுகள் குறையும். பிள்ளைபேறு உண்டாகும். இழுபறியாக இருந்த வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். 2.3.2026 அன்று காலை 7.51 மணி முதல் 4.3.2026 அன்று பகல் 1.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும். சந்திர கிரகணத்தன்று ஸ்ரீ ருத்ரம் கேட்கவும் அல்லது படிக்கவும்.
கும்பம்
எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு ஏழாமிடமான சம சப்தம ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம். வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது. அல்லது சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை வரலாம்.
பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நடக்கலாம். 4.3.2026 அன்று பகல் 1.45 முதல் 6.3.2026 அன்று பகல் 10.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சந்திர கிரகணத்தன்று நலிந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.
மீனம்
திருமண தடை அகலும் வாரம். ராசியில் சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளது. வீண் கவலைகள் நீங்கி துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். மனதில் தோன்றும் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும். உங்களது பெயர், புகழ், சமுதாய அந்தஸ்து உயரும். பல பெரிய மனிதர்களின் நட்பால் நற்பலன்கள் உண்டாகும். சிலருக்கு தொழில், உத்தியோக ரீதியான வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் அமையும். பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறும். சொந்த மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும்.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சல், மனக்குழப்பம் அகலும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். புத்திரர்களின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். 6.3.2026 அன்று இரவு 10.18 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அமைதியாக இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். சந்திர கிரகணம் முடிந்த பிறகு முக்கிய பணிகளை துவங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






