என் மலர்tooltip icon

    வழிபாடு

    வளங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம்- புராண கதைகள்
    X

    வளங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம்- புராண கதைகள்

    • சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
    • தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள்.

    வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்க வேண்டியும் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு பெண்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் இந்த வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல புராணக் கதைகள் கூறப்படுகிறது.

    மகத நாட்டில் குந்தினபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண், தன் கணவன், மாமனார், மாமியார் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சாருமதி தினமும் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் இறை அம்சமாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். இதனால் மனம் மகிழ்ந்த வரலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ''உனது பக்தியால் மனம் மகிழ்ந்தோம். என்னை நினைத்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் குடிகொள்வேன்'' என்றார். மேலும் கனவில் வரலட்சுமி விரதம் இருப்பதற்கான வழிமுறைகளையும் தேவி அருளினார்.

    மறுநாள் அதிகாலையில் கண் விழித்ததும், தன் கனவில் கண்டவற்றை குடும்பத்தினரிடம் கூறினாள் சாருமதி. இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனைவரும் இந்த சிறப்புவாய்ந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டனர். அதன்படி விரதம் இருந்து வரலட்சுமியின் அருளை பெற்றனர். இவர் விரதம் இருந்து பெற்ற நன்மைகளை பார்த்த அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரும் அந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கினர்.

    பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தார். அவரது மனைவி சுரசந்திரிகா. இந்த தம்பதிகளுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். இவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். தன் மகள் மீது அதிக அன்பு கொண்டிருந்த சுரசந்திரிகா அவளது பிரிவு தாங்காமல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தாள்.

    ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலியின் வேடத்தில் சுரசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தார். மகாலட்சுமி, சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி, அதை கடைப்பிடிக்கும் படி எடுத்து கூறினார். ஆனால் தன் மகளை பிரிந்த வருத்தத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ யாசகம் கேட்டு வந்திருப்பதாக கருதி அவமானப்படுத்தி வெளியே விரட்டி விட்டாள்.

    விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, அரசியின் மகளான சியாமபாலா சமாதானப்படுத்தினாள். அத்துடன், லட்சுமி தேவியிடம் இருந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கான முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். இதையடுத்து பக்தியுடன் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். விரதத்தின் மகிமையில் அவள் செல்வ செழிப்பு பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோர், எல்லாவற்றையும் இழந்து வறுமையின் பிடியில் சிக்கி ஏழ்மையில் வாடத் தொடங்கினர்.

    தன் பெற்றோரின் நிலைமையை அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் இங்கிருந்த அனுப்பிய தங்கம் எல்லாம் அவர்கள் செய்த தீவினையால் கரியாக மாறி போனது. இதை கேள்விப்பட்டு வருந்திய சியாமபாலா, தன் தாயான சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்லி பூஜை செய்யும்படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்தாள். அதன்பிறகு விரதத்தின் பலனால் இழந்த செல்வங்கள் பெற்று மீண்டும் சுகவாழ்வு வாழ தொடங்கினாள்.

    சித்திரநேமி என்றவள் தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள், தேவர்களுக்கிடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நடுவராக இருந்து நியாயமான தீர்ப்பு வழங்குவாள். ஒரு சமயம் கயிலாயத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவி, ''நாதா நான் உங்களை ஜெயித்து விட்டேன்'' என்றார். ஆனால் அதை மறுத்தார் சிவபெருமான். இதனால் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இறுதியில் இருவரும் சித்திரநேமியிடம் இதற்கான தீர்ப்பை கேட்டனர். அவள், பரமசிவன் தான் போட்டியில் வெற்றி பெற்றதாக கூறினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ''நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி பொலிவிழந்து தவிப்பாயாக'' என்று சாபமிட்டார். இதையடுத்து தன்னை மன்னித்து அருளும்படி வேண்டினாள் சித்திரநேமி. உடனே மனம் இரங்கிய பார்வதி தேவி, ''நதிக்கரையில் வரலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் உனக்கு ஏற்பட்ட இந்த நிலை மாறும்'' என்று சாபவிமோசனம் அருளினார். சித்திரநேமியும் அவ்வாறே விரதம் இருந்து வரலட்சுமியை வழிபட்டு நோய் நீங்கி சாபவிமோசனம் பெற்றாள்.

    Next Story
    ×