என் மலர்
வழிபாடு

2026 மாசி மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
- உங்களின் ராசி அதிபதி செவ்வாய் மாசி மாதம் 11ம் (23.2.2026) வரை மகர ராசியில் உச்ச நிலையில் இருப்பார்.
- பிறக்கப் போகும் மாசி மாதத்தில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து உச்சம் பெற போகிறார்
ஆளுமை தன்மை நிறைந்த மேஷ ராசியினரே
உங்களின் ராசி அதிபதி செவ்வாய் மாசி மாதம் 11ம் (23.2.2026) வரை மகர ராசியில் உச்ச நிலையில் இருப்பார். அதன் பிறகு கும்ப ராசிக்கு செல்வார். ராசி அதிபதி உச்சம் பெறுவதும் லாப ஸ்தானம் செல்வதும் சிறப்பான பலன்களையே ஏற்படுத்தித் தரும். கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட இன்னல்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம்.நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பால் புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் நிறைவேறும். சிலருக்கு அதிர்ஷ்டமாக பொன் பொருள் சொத்துக்கள் சேரும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்களின் நட்பு, ஆதாயம் கிடைக்கும். தொழிலில் அகலக்கால் வைக்கக் கூடாது. பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். ஏழரைச் சனியால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய முடியும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு திருமணத் தடை அகலும். வெகு சிலருக்கு மறுதிருமணம் நடக்கும்.புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும்.
சொத்துக்களை மீட்க தேவையான நிதி உதிவி கிடைக்கும். தவறுதலாக வாங்கிய வில்லங்க சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பாகப் பிரிவினை நடக்கும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.அரசு வேலைக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது.
உங்களை உதாசீனம் செய்தவர்களுக்கு உங்கள் தயவு தேவைப்படும். நிம்மதி நீடிக்கும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாட உகந்த காலம்.வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.காணமால் போனவர்கள் வீடு திரும்புவார்கள். செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்தவர்களுக்கு நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் குறையும்.மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். உயர்கல்வி வாய்ப்புகள் சித்திக்கும்.
பொருளாதாரம்
லாபகரமான மாதம். இந்த மாதத்தில் ராசிக்கு 11ம் இடமான லாபஸ்தானத்தில் உள்ள ராகுவுடன் சூரியன் சேருகிறார் இது லாபத்தையும், வெற்றியைும் அதிகரிக்கும் அமைப்பாகும்.புதிய சொத்துக்கள் சேரும். இது வரை விற்க முடியாமல் கிடந்த பழைய பூர்வீகச் சொத்துக்கள் விற்கும்.வீடு, வாகனம், நிலம், தோட்டம், பிள்ளைகளின் திருமணம் என சுப விரயங்கள் அதிகமாகும். வருமானம் இல்லாமல் கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் நாணயத்தை காப்பாற்ற முடியாமல் சங்கடத்தை அனுபவித்தவர்கள் சரளமான பொருள் வரவால் தொழில், வாழ்க்கை இரண்டிலும் திருப்தியான பலனை அடைய முடியும். நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்களோ அந்த துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள்.
முதலீட்டாளர்கள்
முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும்.விரயமும், துயரமுமான நிலை மாறும்.கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். தொழிலிலில் முன்னேற்றம் இருக்கும்.இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். தொழில் போட்டியாளர்கள் விலகுவார்கள். தொழில் விருத்தி குடும்பத் தேவை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு விண்ணப்பித்த கடன் உதவி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
இடமாற்றமும் பதவி உயர்வும் நிச்சயம். அரசு வேலைக்கு முயற்சித்தவரின் கனவு நனவாகும். பொருளாதார நெருக்கடிகள் விலகும் உத்தியோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேலை நிரந்த மாகும். அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆனால் அதிகம் உழைத்து சிறிய பொருளை சம்பாதிக்க நேரும்.
அரசியல்வாதிகள்
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்மீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூக அந்தஸ்து உயரும் . நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு , மரியாதை உயரும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். திடீர் லாபம் கிடைக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும்
பெண்கள்
லௌகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் போகிறீர்கள். குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். கண், காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் அறுவை சிகிச்சையில் சீராகும்.புதிய சொத்து வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். பிற மொழி இனத்தவர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
தந்தை, தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். அவரவர் வயதிற்கு ஏற்ப குழந்தை பாக்கியம், பேரன், பேத்தி யோகம் உண்டாகும். குடும்பம் கோவிலாக இருக்கும். உங்களின் பேச்சிற்கு மற்றவர் கட்டுப்படுவார்கள். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள்.நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
சூரியகிரகணம்
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் இந்த கிரகணம் நடைபெறுகிறது. அதுவே பாதகஸ்தானம் என்பதால் சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். அல்லது தொழில், தொழில் உத்தியோகக்திற்காக பிறந்த ஊரை விட்டு பிரிந்து வெளியூர், வெளிநாடு போகலாம். பிறரை நம்பி குறுக்கு வழியில் செல்லக் கூடாது.
எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். கடன் பட்டு சொத்து சுகம் அமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். போட்டி தேர்வு, பந்தயங்களில வெற்றி நிச்சயம்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும்.பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும்.காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம்.ஆன்மீக குருமார்களின் ஆசிர்வாதம் பெறுவது, நன்னடத்தையுடன் நடந்து கொள்வது, சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கிரகணம் முடிந்த பிறகு அருகில் உள்ள சிவன் கோவிலில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் குடும்ப வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் நீங்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
மகிழ்ச்சியான ரிஷப ராசியினரே
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து உச்சம் பெற போகிறார்.
உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது ரிஷப ராசியினருக்கு இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அதிர்ஷ்டமான மாதமாக அமையப் போவதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் மாதம். புகழ், அந்தஸ்து, கவுரவும் உயரும்.
மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும்.எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவைகளை நிறை வேற்றுவீர்கள். எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் போனில் நலம் விசாரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்–களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவி இருவருமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகத்திற்காகவோ கருத்து வேறுபாடு காரணமாகவோ பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள். சிலர் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். சம்பந்திகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். திருமணம் கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்–படுத்தினால் வளமான எதிர்காலம் உண்டு. உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்கள் விற்று விடும்.
முதலீட்டாளர்கள்
பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள். கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைக்கும். சிலர் நண்பர்கள் அல்லது களத்திரத்துடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள்
எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும்.இதுவரை இருந்த பயம் அகலும்.கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும்.புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணம் அதிகமாகும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.பெரிய பதவிகளும் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த மாதம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். ஆற்றலுக்கும், திறமைக்கும் பெருமை சேர்க்கும் சம்பவங்கள் நடக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். கட்சியில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பிறரின் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிலருக்கு மிகப் பெரிய கட்சி மாறி இணையும் வாய்ப்பு கிட்டலாம்.
பெண்கள்
பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. தடை பட்ட சொத்து விற்பனை சாதகமாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். அரசின் நலத்திட்டத்தால் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்தியாவில் கிரகணம் தெரியாது என்றாலும் இந்த காலகட்டத்தில் ராகுவும் செவ்வாயும் நெருக்கமாக பயணிப்பார்கள். ராசிக்கு பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் கிரகணம் நடக்கப் போகிறது. தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் வரலாம். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரப்படக்கூடாது. குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்
இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம். பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும்.பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். சிலருக்கு வெளி நாட்டு குடியுரிமை கிடைக்கும். வேற்றுமொழி கற்கும் ஆர்வம் கூடும். நல்ல திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். வழக்குகள் சாதகமாகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். அதனால் புதிய தொழில் முயற்சியை தவிர்ப்பது நல்லது. அகலக்கால் வைக்க கூடாது. சுய ஜாதக. ரீதியாக ராகு/கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்வது நல்லது.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும். சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. புதியதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம்.
இன்கம்டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் கணக்கை முறையாக வைத்துக் கொள்வது அவசியம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். மன துக்கம் விலகும். காரிய வெற்றி கிடைக்கும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் அகலும்.
உயர்வான எண்ணம் கொண்ட மிதுன ராசியினரே
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கும்ப சஞ்சரிப்பார். மாசி14 (26.2.2026) அன்று கும்ப ராசியில் வக்கிரம் அடைவார். கோட் சார கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளதால் சுகமான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். ஆன்ம பலம் கூடி புதுப் பொலிவு ஏற்படும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப வாழ்க்கையில் நிலவிய பிரச்சினைகள் தடைகள் விலகும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.
குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கவுரவப் பதவிகள் கிடைக்கும். காணாமல் போன பொருள்கள், முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஞாபக சக்தி கூடும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். சிலர் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும்.
பொருளாதாரம்
பணவரவு அதிகரிக்கும். சுய சம்பாத்தியம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுய ஜாதக ரீதியாக தன வரவில் நிலவிய தோஷங்கள் விலகும். பொன், பொருள் சேரும். பற்றாக்குறை வருமானத்தில் வாழ்ந்த குடும்பம் நிறைவான வருமானத்துடன் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும். மனதிலிருந்த கவலைகள் மாறும். பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் சேரும். ஸ்திர சொத்துக்களின் மதிப்பு உயரும். சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து, தொழில் மற்றும் சுப செலவிற்காக வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்கள்
உற்பத்தி பெருகி, இலாபம் கூடும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். எதிர்கால வளர்ச்சிக்கு புதிய மார்க்கம் தென்படும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும். முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும். உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் மனநிலை மாறும். பேச்சில் பொறுமை மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும். சிலர் சுய தொழில் துவங்கலாம். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பதவி மாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பொது மக்கள் ஆதரவை பெற வேண்டிய காலம். மேலிடத்தின் அதிகாரத்தால் மன அமைதி குறைவு உண்டாகலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது. எதிர்பாலினத்திடம் கவனமாக இருக்கவும்.
பெண்கள்
சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் மாதம். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும். உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும். நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும். வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மிதுன ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ராகு சேர்க்கை ஏற்படுகிறது. இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். நன்மைகள் நடைபெறும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். மூத்த சகோதரர், தந்தை பக்க பலமாக இருந்து உதவுவார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச்சந்தை, சூதாட்டம், புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷம் இருப்பவர்கள் கிரகணத்தன்று பித்ரு சாந்தி பூஜை செய்வதால் பாக்கிய பலம் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைத்த சூடான உணவை சாப்பிடவும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். மிதுன ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும்.வீடு மாற்றுவது, வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவித்தல் நல்லது.
முக்கிய பணப்பரிவர்த்தனைக்கு உள்ள ஆவணங்களை பத்திரமாக பராமரிக்க வேண்டும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட, பணம், பொருள், உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சை இருந்தால் செய்து கொள்ளலாம். முக்கிய ஆபரணம் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.அடமான நகைகள் சொத்துக்களை மீட்கும் முயற்சி வெற்றி தரும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தேவைகள் நிறைவேறும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.
மாற்றத்தை விரும்பும் கடக ராசியினரேமட்டற்ற மகிழ்ச்சியோடு நல்ல மாற்றங்களும் ஏற்றங்–களும் உண்டாகும் மாதம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆன்ம பலம் பெருகும். தடைபட்ட பணிகள் துரிதமாக நடைபெறும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கடந்த கால விருப்பங்கள் தற்போது நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கடன் பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்துவீர்கள்.
ஊர் மாற்றம் வேலை மாற்றம், வீடு மாற்றம், பள்ளி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் உண்டாகும். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி கூடி உடல் நலம் சீராகும். உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது.
சுமாராக படித்த மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள். முன்னோர்கள் செய்த புண்ணிய பலனால் பங்குச் சந்தை ஆதாயம் திருப்தி தரும். காதல் முயற்சிகள் வெற்றியில் முடியும்.
ஆன்மீக யாத்திரை செல்லும் விருப்பம் நிறைவேறும். சூரிய சந்திர கிரகணம் 2,8ம் இடங்களில் சம்பவிக்க உள்ளது. கிரகங்கள் தன் கடமையைச் செய்யும். யாரையும் விட்டு வைப்பதில்லை. மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு சோதனை இருக்கத்தான் செய்யும். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைத்தால் இந்த மாதம் இனிய மாதமாக மாறும்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கலாம். குடும்ப பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்பு உயரும். தாராளமான தன வரவால் ஆடம்பரச் செலவில் ஆர்வம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் உயரும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம், பகை அதிகமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் உபரி பணத்தை சேமிப்பதை தவிர்க்கவும்.
முதலீட்டாளர்கள்
தொட்டது துலங்கும் வருடம். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் துவங்கலாம். பழைய கூட்டாளி விலகலாம். திறமையான தொழில் பங்குதாரர் கிடைக்கலாம். தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அஷ்டம ராகு ஆதிக்கம் உள்ளதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டிய காலம்.
உத்தியோகஸ்தர்கள்
தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். யாரையும் பகைக்கக் கூடாது. முன்யோசனை இல்லாத அவசரத்தனமான பேச்சு மற்றவர்களுக்கு மன வருத்தத்தை தரும் விதமாக இருக்கும்.
அரசியல்வாதிகள்
அதிகாரப் பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 2ல் கேது இருக்கும் வரை யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக் கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்து விடலாம். எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரயம் தான்.
பெண்கள்
பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்ச்சியான விசயங்கள் நடந்து மகிழ்விக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தம்பதிகள் ஒற்றுமை சிறக்கும் ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் சீராகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். குல, இஷ்ட தெய்வ தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சூரிய கிரகணம்
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ராசிக்கு 8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால், வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும்.
கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை. யாரையும் சபிக்க கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும். எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






