என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கன்னாப்பூர் நடுதறிநாதர் ஆலயம் தேவாரப் பாடல் பெற்ற 120–வது தலமாக விளங்குகிறது.
    திருவாரூர் அருகே உள்ளது கன்னாப்பூர் நடுதறிநாதர் ஆலயம். காவிரி தென்கரைத் தலங்களில், தேவாரப் பாடல் பெற்ற 120–வது தலமாக இது விளங்குகிறது.

    கயிலாயத்தில் ஒரு நாள் சிவபெருமான் உமாதேவியாருடன் வீற்றிருந்தார். அப்போது சுதாவல்லி என்ற பெண், உமை வடிவம் கொண்டு நடித்து, நாட்டியமாடி சிவபெருமானை மகிழச் செய்தாள். இதனைக் கண்ட உமாதேவி அச்சம் கொண்டு, சுதாவல்லியை மண்ணுலகில் பிறக்க ஆணையிட்டாள். இதனால் சுதாவல்லி கலங்கினாள். அவளிடம் உமாதேவி, ‘இது விதிப்பலன். நீ மண்ணுலகில் பிறந்து, சிவபெருமானை பூஜை செய்து என்னை வந்து அடைவாய்’ என்று அருளினாள்.

    சுதாவல்லி தேவூருக்குத் தெற்கே உள்ள திருத்தலத்தில் பிறந்தாள். பெற்றோர் அவளுக்கு கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்தனர். பழவினைத் தொடர்பால் சிவபெருமானை பூஜை செய்து வந்தாள். அவள் மணம் செய்து கொள்ளும் பருவத்தை எட்டியபோது, ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும் கமலவல்லி சிவபெருமானை தினமும் பூஜித்து வந்தாள். எப்போதும் சிவலிங்கம் ஒன்றை வைத்து ஆராதனை செய்தாள். இதனால் வெறுப்படைந்த, அவளது கணவன், சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போய் கிணற்றில் வீசினான்.

    இதை உணர்ந்த கமலவல்லி, கணவனுக்கு தெரியாமல் சிவனை பூஜிப்பது என்று முடிவு செய்தாள். தன் வீட்டு பசுங்கன்று கட்டும் தறி(முளை) ஒன்றை, சிவலிங்கமாக பாவித்துப் பூஜை செய்யத் தொடங்கினாள். பக்தர்கள் நினைக்கும் உருவில் தோன்றுபவன் இறைவன். ஆகையால் சிவனை தறியில் கண்டாள். கமலவல்லியின் இந்த செய்கையை அறிந்த அவளது கணவன், கோடரியால், கன்று கட்டும் தறியை வெட்டினான். வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. கமலவல்லியின் பக்தியை, அவளது கணவன் உணரும் வகையில் இறைவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்தார். கமலவல்லியும், அவளது கணவனும் சிவலோகம் அடைந்தனர்.

    கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் (கன்று+ஆப்பு+ ஊர்)= ‘கன்றாப்பூர்’ என வழங்கப்பெற்றது. கன்று கட்டும் தறியின் நடுவில் இருந்து லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியதால் இறைவன் ‘நடுதறிநாதர்’ என அழைக்கப்பட்டார். கன்றுக் குட்டியின் நடுதறி இருந்த இடமே, இன்று நடுதறிநாதர் கோவிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடரி வெட்டு உள்ளதைக் காணலாம்

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய இந்தக் கோவில் மூன்று நிலைகளையுடைய சிறிய ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. ஆலயத்தில் கொடிமரமில்லை. பலிபீடம், நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள் பிரகாரம் சுற்றி வரும்போது தீர்த்த கிணறு, விநாயகரை தரிசிக்கலாம். அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயக மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சன்னிதிகள் உள்ளன.

    பிரகார வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருமேனியுடன் காட்சி தரும் மாதுமை நாயகி என்னும் அம்பாள் சன்னிதியைக் காணலாம். அம்மனுக்கு நேர் எதிரில் நடுதறிநாதர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். மூலவர் சதுரபீட ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

    கயிலை மலையில் ஈசனின் கண்களை அம்பாள் விளையாட்டாகப் பொத்தினாள். அதனால் உலகமே இருண்டது. பயத்தில் தன் கைகளை சிவனின் கண்களில் இருந்து அகற்றினாள். மீண்டும் இருள் அகன்றது. ஈசன் உமையைப் பார்த்து, ‘நீ விளையாட்டாக கண் மூடியது ஒரு கணமே என்றாலும், அதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. அதற்கு பரிகாரமாக நீ பூலோகத்தில் உள்ள கன்றாப்பூர் என்ற சிவதலத்தில் என்னை பூஜித்து பாவ நிவர்த்தி பெறுவாயாக’ என்று அருளினார்.

    அன்னை கன்றாப்பூரை அடைந்து, அருகில் ஓடிய பாண்டவ ஆற்றின் கரையில் மணலில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வந்தாள். அப்போது பெரும் வெள்ளம் பெருக் கெடுத்து வந்தது. மணல் லிங்கம் கரைந்து விடாமல் இருக்க, உமையவள், தன் இருகரங்களாலும் சிவலிங்கத்தை தழுவிக்கொண்டாள். அப்போது ஈசன் தோன்றி அன்னையை மணந்து அருள்பாலித்தார்.

    இந்த ஆலயத்தில் உற்சவராக எழுந்தருளியிருக்கும் மாரியம்மனுக்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தில் மூன்று நாட்கள் நடுதறிநாதருக்கு விழா நடைபெறுகிறது. மாசி மாதம் கடைசி செவ்வாய் அதிகாலை 5.30 மணி முதல் சூரிய ஒளி, சிவலிங்கத்தைத் தழுவி சூரிய பூஜை செய்கிற அதிசயத்தை காணலாம். திருக்கன்றாப்பூர் என்பது இத்தலத்தின் புராணப் பெயராகும். இந்த பெயரே கன்னாப்பூர் என்று மாறியதாக தெரிகிறது.

    இந்தத் தலத்தில் உள்ள கங்காமிர்தம் என்னும் சிவகங்கை தீர்த்தம், ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பல்வேறு நோய்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் புத்திரப்பேறு, புகழ் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சாபம் போக்கிய தீர்த்தம் :

    தருமபுரம் என்னும் இடத்தில் மேதாவி என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது ஆசிரமத்தில் பல மாணவர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர். இந்த நிலையில் சுதன்மா என்னும் முனிவர் ஒரு வேள்வி செய்ய இருந்தார். அந்த வேள்வியை, மேதாவி முனிவர் முன்னின்று நடத்த வேண்டுமென்று அவரை அழைத்தார். வேள்விக்குச் செல்லும் முன்பு தன் மாணவர்களில் ஒருவனான தர்மசர்மா என்பவனை அழைத்த மேதாவி முனிவர், பர்ண சாலையையும், பசுக்களையும் பாதுகாக்கச் சொல்லி சென்றார்.

    வேள்வி முடிந்து வந்த போது பசுக்களுக்கு சரியான உணவு கொடுத்து பாதுகாக்காததால், அவை மெலிந்தும், உடல் வற்றியும் இருப்பதைக் கண்டார். இதனால் கோபம் கொண்ட மேதாவி முனிவர், தர்ம சர்மாவை நாய் உருப்பெற்று அலைய சாபம் கொடுத்தார். தர்ம சர்மா, முனிவரின் காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டினான். மனம் இரங்கிய முனிவர், ‘சாபத்தின் படி நீ நாயாக உருமாறி அலைய வேண்டியது தான். ஆனால் சோழ நாட்டில் காவிரி பாயும் கன்றாப் பூரில் சிவகங்கைத் தீர்த்தத்தில் சென்று நீராடினால், உன் நாய் வடிவம் நீங்கும்’ என்று அருளினார்.

    நாய் உருவம் பெற்ற தர்மசர்மா, பல தேசங்களில் அலைந்து திரிந்து, காலவ முனிவரைக் கண்டான். அவரும் அவன் வரலாற்றைக் கேட்டு, கன்றாப்பூர் சிவகங்கையில் நீராட வழி காட்டினார். அவர் காட்டிய வழியில் நீராடி தன் சுய உருவடைந்தான் தர்மசர்மா.

    திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சாட்டியக்குடி என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து இடது பக்கமாக கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால், கன்னாப்பூர் கூட்ரோடு வரும். அங்கிருந்து வலதுபுறம் பிரியும் சாலையில் 1 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். மினி பஸ் வசதி உள்ளது. திருவாரூரில் இருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கன்னாப்பூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.

    புராண வரலாறும், சிற்ப வரலாறும் உடைய கோவில் கன்னாப்பூர். இங்குள்ள இறைவனையும், இறைவியையும் ஒரு முறை தரிசித்து வாருங்களேன்.
    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.
    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.

    இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

    ஸ்தல வரலாறு :

    தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் திருமயிலை கபாலீசுவரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வார் மாமயிலை என்றும், கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், மயிலாப்பில் மயிலாப்பு என்றும் திருஞான சம்பந்தர், மயிலை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    மேலும் பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது சிவபெருமானிடம் உமையவள் பார்வதி தேவி ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய் என்று சாபம் கொடுத்தார்.

    இதற்கு விமோசனம் என்ன என்று உமையவள் கேட்டபோது, தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய் என்று சிவபெருமான் கூறினார். அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாபவிமோசனம் கிடைக்கப்பெற்றாள் அதன் காரணமாக கற்பகவல்லி என்று பெயர் சூட்டினார்.

    அப்போது உமையவள், பார்வதி மயில் உருவில் பரமனை நோக்கி மயில் உருவில் தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும் என்றும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

    கோவில் தோற்றம் :

    இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்குப்பகுதியில் ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. இதன் உயரம் சுமார் 120 அடி உயரமும் உடையது. வெளிப் பிரகாரம் விசாலமாமாகவும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம்.

    சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கபாலீஸ்வரர். இந்த கருவறை பிரகாரத்தில் சந்திரசேகரர், அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பது பேர், சிவநேசர், அங்கம் பூம்பாவை உலா திருமேனி வரிசையில் உள்ளன. கபாலீசுவரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் கற்பகவல்லி தாய் வீற்றிருக்கிறார்.

    கபாலீசுவரர் சந்நிதிக்கு இடப்புறம் உள்ள கோயிலில் மேற்கு திசை மேவி ஆறுமுகத்தோடு அமர்ந்திருக்கிறான் சிங்கார வேலவன். கற்பகவல்லிக்கு நேர் தெற்கே வாயிலார் நாயனார் கோயில் அமைந்துள்ளது. முக்கிய வாயிலின் வடப்புறம் திருஞானசம்பந்தர் பூம்பாவையுடன் இருக்கிறார். கோயிலின் வடக்குவெளிச் சுற்றிலே புனித புன்னை மரம் இருக்கிறது.

    ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு வாயில் எதிரே நர்த்தன விநாயகர் குறைநீக்கி அருளுகின்றார். சனி பகவானுக்கு இக்கோயிலில் தனிச் சந்நிதி உண்டு. நவக்கிரகங்களும் இடம் பெற்றுள்ளன. மேற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் கபாலீசுவரரை நோக்கியபடி நந்தி அமைந்துள்ளது.

    நந்தியை ஒட்டினாற்போல் கொடிமரமும், பலி பீடமும் இருக்கின்றன. நந்தியம் பெருமானுக்கு விசேஷ நாட்களிலும் பிரதோஷ காலங்களிலும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படுகிறது.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :

    இக்கோயிலில் காமிக ஆகமப்படி நாள்தோறும் ஆறுகால பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்திருக்கும்.

    விருட்சம் புன்னை மரம் :

    தல விருட்சம் புன்னை மரம். இங்கே தெற்கு நோக்கி சிவபெருமானும், மயில் உருவுடன் பூஜித்து நிற்கும் உமாதேவியாரும் தலப்பெருமை காட்டி எழுந்தருளியிருக்கிறார்கள்.

    கபாலி தீர்த்தம் :

    இத்திருக்கோயில் மேற்கு நோக்கிய வாயிலின் முன்புறம் நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய திருக்குளம் காணப்படுகிறது. இதுவே கபாலி தீர்த்தம் எனப்படும். கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பெயர் உண்டு.

    பங்குனி மாதம் பவுர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு 10 நாள் பங்குனி உற்சவம், வசந்த உற்சவம், நவராத்திரி, கந்தர் சஷ்டி, திருவாதிரை விழா என திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது.
    திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மருத நிலத்திற்கு உரிய இயல்புகளோடு உள்ளது தலையாலங்காடு என்னும் திருத்தலம். இங்கு நடனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அப்பரின் தேவாரப் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.

    பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் படையெடுத்து வந்து, சோழ மன்னன் ஒருவனோடு இந்த இடத்தில் போரிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் போரில் வெற்றி பெற்ற பாண்டிய மன்னனுக்கு ‘தரையாலக்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற பட்டம் வழங்கப்பட்ட தாக புறநானூறு புகழ்கிறது.

    இந்த சம்பவத்தை உண்மை என்று பறைசாற்றும் விதமாக, இந்த ஆலயத்தின் அருகில் பாண்டியன் மேடு, பாண்டியன் திடல் போன்றவை இன்னும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். போருக்கு முன்பாக இது ஒரே பெரிய கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு எல்லைக்குள் துண்டு துண்டாக சன்னிதிகள் மதிற் சுற்றுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள புதுக்குடி என்ற திடலில் 100–க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன.

    தலையாலங்காடு என்ற பெயரை வைத்துப் பார்க் கும் போது, இந்த பகுதி முன்பு ஆலமரக் காடுகளால் சூழப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. அதன்பின்புதான் இந்த ஊரும், ஆலயமும் அமைக் கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போதும் கூட ஆலயத்தின் அருகில் மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று காணப்படுகிறது.

    தீர்த்தக்குளம் :

    இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கில் ஒன்றும், கிழக் கில் ஒன்றுமாக வளைவுகள் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை. ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப் பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

    நடனம் புரியும் ஈசன் :

    தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர் களுக்கு, சிவபெருமானைக் காட்டிலும் தவத்தில் சிறந்த தாங்களே சிறப்பானவர்கள் என்ற செருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சிவபெருமானை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினர். பின்னர் சிவபெருமானின் மீது முயலகன் என்ற அசுரனை ஏவினர். ஆனால் ஈசனோ, அந்த அசுரனை தனது பாதத்தின் கீழ் போட்டு அழுத்தி, அவன் மீது ஏறி நின்று நடனமாடினார்.

    அந்த ஈசனே இங்கு அருள்பாலிப்பதால், இத்தல இறைவன் நடனேஸ்வரர் என்றும், ஆடவல்லநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் சன்னிதி முன்பாக உள்ள மகா மண்டபத்தில், முயலகன் மீது சிவன் காலூன்றி ஆடும் நடராஜ சபை இதனை உறுதி செய்கிறது. இசை, நடனத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், இங்கு வந்து நடராஜனை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    சுவாமி சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வலது புறத்தில் தனிச் சன்னிதியில் விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் பிரசன்ன விநாயகர், அதையடுத்து வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

    வடக்குப் பகுதிக்கு வலமாக வந்தால், அங்கே 10 கரங்களுடன் தசபுஜ காளிதேவியின் சன்னிதி அமைந் திருக்கிறது. இந்த காளிதேவியை வழிபட்டுதான் போரில் பாண்டிய மன்னன் வென்றதாக கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வரும் ராகு காலத்தில், இந்த காளிதேவியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்தல மூலவர் விமானத்தின் தோற்றமே வித்தியாசமாக காட்சி தருகிறது. இதில் இருந்து ஒரு தை அமாவாசை நாளில், அப்பருக்கு இறைவன் காட்சி கொடுத்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. அந்த காட்சியும் விமானத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விமான மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.

    திருநாவுக்கரசர் என்று இறைவனால் அழைக்கப்பட்ட அப்பர் பெருமான், ‘இத்தனை நாளும் இத்தலத்தை வணங்காமல் காலம் கடத்தி விட்டேனே’ என்று கூறி 10 பதிகங்களைப் பாடியிருப்பது சிறப்பானதாகும். அதில் முதல் பதிகம் இது.

    ‘தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
    சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
    அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை
    ஆதிரைநாள் ஆதரித்த அம்மான்தன்னை
    முண்டத்தின் முளைத்து எழுந்த தீயானானை
    மூவுருவத்து ஓருருவாய் முதலாய் நின்ற
    தண்டத்தில் தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கினேனே’.

    இந்தக் கோவிலில் லட்சுமி திருவுருவம் இல்லை. ஆனால் சிவன் சன்னிதி மண்டபத்தில் வடபுறத்தில் சரஸ்வதிக்கு, ஜோதியாக காட்சி தந்த சிலாரூபம் உள்ளது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது. அங்கிருந்து சற்று தூரம் நடந்தால், தெற்கு வாசலுக்கு எதிரே நந்தி மண்டபம் உள்ளது. அதன் அருகில் தனிச் சன்னிதியில் அம்பாள் ‘பாலாம்பிகை’ என்ற பெயரில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பழங்காலத்தில் இந்த அம்மனுக்கு ‘திருமடந்தை அம்மன்’ என்ற பெயர் இருந்திருக்கிறது.

    அம்பாள் சன்னிதிக்கு அருகில் கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கிறார். சுவாமி– அம்பாளுக்கு இடையில் திருநள்ளாறு போல் கிழக்கு பார்த்தபடி இவர் இருப்பதால், இத்தல சனீஸ்வரர் தோஷ நிவர்த்தி செய்ய ஏற்றவராக, அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது.
    கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி கோவில்.
    அக்காலத்தில் சரியான சாலைகள் இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாலும், செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியம் என்ற சிற்றூர் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியாக இருந்தது. இதனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்து கடவுள் சிலைகளை பாதுகாக்க, இந்த ஊரை நம் முன்னோர்கள் தேர்வு செய்தனர்.

    பல புகழ்பெற்ற ஊர்களில் உள்ள கோவில் விக்கிரகங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டன. அதிகமாக வெளியில் தெரிந்தால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பெரியோர் அஞ்சியதாலும், ஏராளமான பொதுமக்களுக்கு செட்டிப்புண்ணியத்தில் மறைந்திருந்த பெறற்கரிய தெய்வீகப் பொக்கிஷங்கள் பற்றி அதிகமாக தெரியாமலேயே போய்விட்டன.

    இருப்பினும், கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி அங்கிருப்பதை அறிந்திருந்த பலர், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், ஒழுக்கமும், மனத்தூய்மையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வந்து தரிசித்தவண்ணம் இருந்தனர்.

    அக்காலத்திலிருந்தே செட்டிப்புபண்ணியத்திற்கு சாலை வசதிகள் கிடையாது. ஆதலால், எவ்விதமாவது இத்திருத்தலம் எம்பெருமான்களைத் தரிசித்தே ஆகவேண்டும் என்ற மன உறுதி இருந்தவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுடன் செட்டிப்புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்தது. இங்கு 350 ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.

    பிறகு சிரஸ்தார் ராவ்சாஹிப் ரங்காச்சார் சுவாமி ப்ரயத்தனத்தில் கடலூர் அருகே உள்ள திருவேந்திரபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதிசுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து தம் கிராமமாகிய செட்டிப்புண்ணியம் கிராமத்தில் கீலக வருடம் வைகாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் எழுந்தருள வைத்தார்.

    இப்பெருமாள் நித்ய ஆராதனத்துடன் 1848-ம் ஆண்டு வைகாசி மாதம் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அவ்வூருக்கு எழுந்தருளினார். அவருடன் ஸ்ரீயோக ஹயக்ரீவரும் எடுத்து வரப்பட்டார். இதுகுறித்த தகவல் அப்போதைய தெற்கு ஆற்காடு அரசு கெஜெட்டில் வெளிவந்தது தெரிகிறது.

    அதன்பின் இக்கோவிலில் தாயார் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீஅண்டாள் அகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்பாளிக்கின்றனர். ராமஸ்வாமி ஐயங்கார் தனது முயற்சியால் தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்து ஸ்ரீராமன், சீதை, லஷ்மணன் ஹனுமன் சுவாமிகளை 1868-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி வண்டலூருக்கு எடுத்து வந்தார்.

    அதன்பின் ராமசுவாமி ஐயங்கார் பெங்களூர் செல்வதற்கு முன் ஸ்ரீராமன், சீதை லஷ்மணன், ஹனுமமன் சுவாமிகளை தனது சொந்த கிராமமான செட்டிபுண்ணியத்திற்கு கொண்டு வந்தார். தற்போது வரதராஜசுவாமி கோவிலில் தனி சன்னதியுடன் ஸ்ரீராமன், சீதை, லஷ்மணன், ஹனுமன், சுவாமிகள் அருள்பாளிக்கின்றனர்.

    மூலம்: ஸ்ரீவரதராஜப் பெருமாள்
    உற்சவர்: ஸ்ரீதேவநாத சுவாமி
    தாயார்: ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார்
    ஆகமம்: ஸ்ரீவைகாணசம்

    சென்ற சில ஆண்டுகளாக ஸ்ரீயோக ஹயக்ரீவர், ஸ்ரீதேவநாதப்பெருமான் திருவருளினால் அனைத்து மக்களும் கல்வித்திறன், ஞாபகத் திறன், கிரகிப்புச்சக்தி, தூய்மையான மனம், ஒழுக்கம் ஆகியவற்றைத் தவறாது தந்தருளும் சக்தி இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவருக்கு உள்ள அற்புத சக்தியை உணர்ந்தனர். அதனால் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து தரிசித்ததன் பலனாக ஏராளமான மாணவர்கள் அவர்களது கல்வித் துறைகளில் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

    அநேக காலத்திற்கு பிறகு 3.2.1993 பாலாலயம் நடந்தது. 17.5.93 அன்று அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோஷணம் நடந்தது. இதற்கு முன் 100 வருடத்திற்குள் ஸம்ப்ரோஷணம் நடந்ததாக தெரியவில்லை என பெரியோர்கள் சொல்ல கேள்வி.

    திருவிழாக்கள் :

    தை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை திருப்பார்பேட்டை உத்சவம் கிராமத்தாரால் நடத்தப்படுகிறது. தவிர கோவிலில் ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளை மூலமாக தை வெள்ளி ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீதேசிகன் சாத்துமுறை, பெருமாள் அவதார உத்சவம் (வைகாசி மகம்) தீபோத்சவம் நடக்கின்றன. சத்யயன உத்சவம் சாத்துமுறை விஜயதசமி ஆடிப்பூரம் பங்குனி உத்திரம் உடையவர் சாத்து முறை, ஸ்ரீராமநவமி உத்சவங்கள் உபயகாரர்கள் மூலமாக நடைபெறுகிறது.

    எப்படி, எப்போது செல்ல வேண்டும்?

    சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பிற்கு எதிரில் (லைட் ரூபிங் பேக்டரி) மேற்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் செட்டிப்புண்ணியம் கோவில் உள்ளது.

    இங்கு செல்லும் பஸ் (60சி) தாம்பரத்தில் இருந்து வடகால் என்ற பெயர் பலகையுடன் காலை 10 மணி, மதியம் 1.40 மணி, மாலை 6.20 மணி, இரவு 9.10 மணி, காலை 8 மணி, மாலை 4  மணிக்கு புறப்படும்.

    செட்டிப்புண்ணியத்திலிருந்து தாம்பரத்திற்கு காலை 6.40 மணி, மதியம் 11.20 மணி, மாலை 2.55 மணி, இரவு 7.40 மணி. காலை 9 மணி, மாலை 5 மணிக்கு பஸ் புறப்படும்.

    தாம்பரம்-செங்கல்பட்டு பஸ்சில் சிங்கப்பெருமாள் கோவிலில் இறங்கி ஆட்டோ வைத்துக் கொள்ளலாம்.

    கோவில் திறந்திருக்கும் நேரம் :

    காலை 7.30 மணி முதல் 12 மணி வரை
    மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.

    புதன், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கோயில் அதிக நேரம் திறந்திருக்கும்.

    ஹயக்ரீவர் கோவில் போன் நம்பர் :

    செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவிலை தொடர்பு கொண்டு பூஜை முறைகள் மற்றும் வழிபாடு நேரம் குறித்து முன்னதாகவே உறுதி செய்து கொள்ள விரும்புபவர்கள், 86751 27999 - என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல்களை பெறலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.
    கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.


    கோவில் வரலாறு :

    அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலை சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார்.

    அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள்.

    தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.

    அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.

    சுசீந்திரம் பெயர்க் காரணம் :

    தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.

    விழாக்கள் :

    இங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப் பெற்றாலும் கீழ்க்காணும் விழாக்கள் இக்கோயிலில் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

    * சித்திரை தெப்பத்திருவிழா - 1 நாள்
    * ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள்
    * மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள்
    * மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள்

    கோவில் முகவரி :

    தாணுமாலையர் திருக்கோவில்
    சுசீந்திரம் - 629704
    கன்னியாகுமரி.

    போன் நம்பர்  :   +91-4652241421
    மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் என்னும் பத்ரகாளி திருக்கோவிலாகும். மயிலாப்பூர் நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக இத்தல அம்மன் விளங்குகின்றாள்.
    தொன்மைச் சிறப்பு :

    மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதில மடைந்திருந்த இந்தக் கோவில் 1981–ம் ஆண்டு அடியார்கள் ஆதரவினாலும், மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகளின் ஆதரவினாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தக்கனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆலய அமைப்பு :

    வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன. வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாகஅமர்ந்த கோலத்திலும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றனர். அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம் ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன.

    கோலவிழி அம்மன் :


    அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்குகிறாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும்.

    ‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என்றால் அது மிகையல்ல.

    விழாக்கள் :

    சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10–ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.இத்தகைய சிறப்புமிகு ஆலயத்தின் குடமுழுக்கு விழா வருகிற 11–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

    அமைவிடம் :

    சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.
    தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார்.
    மூலவர் : தாயுமானவர்
    அம்மன்/தாயார்  : மட்டுவார்குழலி
    தல விருட்சம்   : வில்வம்
    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
    ஆகமம்/பூஜை  : காரணம், காமீகம்
    பழமை  : 1000-2000 வருடங்களுக்கு முன்
    புராண பெயர் : சிரபுரம், மலைக்கோட்டை
    ஊர்  : திருச்சி

    திருவிழா :

    சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி.

    தல சிறப்பு :

    பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69  வது தேவாரத்தலம் ஆகும்.

    சிறப்பம்சம் :

    பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன்  சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    பொது தகவல் :


    இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. மலையில் அமைந்த இக்கோயிலில், குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இருக்கிறது. இதை, மேல்வீதி  என்றும், மலையைச் சுற்றி அடிவாரத்திலுள்ள வீதியை, கீழ்வீதி என்றும் சொல்கிறார்கள். விழாக்களின்போது இவ்விரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார்.

    நவக்கிரக மண்டபத்தில் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் சூரியன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனை நோக்கி திரும்பியிருக்கின்றன. மலை அடிவாரத்தில் மாணிக்கவிநாயகர்  இருக்கிறார். தனிச்சன்னதியிலுள்ள முத்துக்குமாரசுவாமியை, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு அருகில், ஒரு பள்ளத்திற்குள், பாதாள அய்யனார் இருக்கிறார்.

    பிரார்த்தனை :

    திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை.சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்:

    சிவன், அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, வாழைத்தார் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

    தலபெருமை :

    உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.

    வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, செவ்வந்தி நாதர் என்ற பெயரும் உண்டு.

    முகவரி :

    தாயுமானவர் திருக்கோயில்
    திருச்சி - 620002

    போன் நம்பர் : +91 4312704621
    அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று.
    திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. இது மிக பழமையான கோவில்களில் ஓன்று. அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார்.

    நாகப்பட்டினம் அருகில் பொருள்வைத்சேரி என்ற ஊரில் ஒருசிற்பி இருந்தார். அவர் ஒரு தீவிர முருக பக்தர். அவர் ஒரு சமயம் முருகன் சிலையை செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த சோழ மன்னர் முருகன் சிலையின் அழகில் மயங்கி சிற்பி இதுபோன்ற சிலையை வேறு எங்கும் உருவாக்க கூடாது என்று நினைத்து சிற்பியின் கட்டை விரலை அறுத்து விடுகிறார்..சிற்பி அந்த ஊரை விட்டு பக்கத்தில் இருந்த வேறு ஊருக்கு செல்கிறார்.
     
    அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை வடிக்கிறார். கட்டை  விரல் இல்லாமலும் அதே போன்று இன்னொரு அழகான சிலையை வடிக்கிறார். அந்த சமயம் முத்தரசன் என்ற ஒரு குறுநில மன்னர் அந்த வழியே வருகிறார். மன்னரை பார்த்ததும் முருகன் அமர்ந்து இருந்த மயில் பறக்க ஆரம்பிக்கிறது.

    மன்னர் காவலாளிகளை பார்த்து அந்த மயிலை ' எட்டிப்பிடி ' என்று கூறுகிறார். காவலர்கள் மயிலை பிடிக்கும் பொழுது மயிலின் கால் சிறிது சேதம் அடைந்துவிடுகிறது. மயில் சிலை அங்கேயே நின்று விடுகிறது. எட்டுப்பிடி என்ற பெயர் தான் மருவி பின்பு எட்டுக்குடி ஆனது. பின்பு மீண்டும் அதே சிற்பி இன்னொரு முருகன் சிலை வடித்தார். அது தான் என்கண் கோவிலில் உள்ள முருகன் சிலை. முதலில் செய்த சிலை தான் சிக்கல் கோவிலில் உள்ள சிலை.
     
    எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

    இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம். வான்மீகி சித்தர் கோவில் கொண்ட ஸ்தலம். சத்ரு சம்ஹாரம் செய்ய இங்கு வேண்டுவார்கள் ஆசைக்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு ஓசைக்கு மணி கட்டுவதாக வேண்டுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.

    கோவில் முகவரி :

    அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோவில்
    எட்டுக்குடி - 610212
    நாகப்பட்டினம் மாவட்டம்.

    போன் நம்பர்  : +91- 4366245426
    கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது. பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு.
    இயற்கை வளம் மிகுந்த மாநிலமாக கேரளா திகழ்வதால் அது கடவுளின் தேசம் என்று போற்றப்படுகிறது. மலைகளும், இயற்கை எழில் சூழ்ந்த பள்ளத்தாக்குகளும் அடர்ந்த வனங்களும் அருவிகளும் கேரளாவில் ஏராளமாக உள்ளது. இதனால் இங்கு வழிபாட்டு தலங்களும் அதிகளவில் காணப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் போல பட்டியலிடமுடியாத அளவுக்கு பிரசித்திபெற்ற கோவில்கள் கேரளாவில் ஏராளமாக உள்ளன.

    குறிப்பாக பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்கள் இங்கு பல சிறப்பு பெற்று திகழ்கிறது. அவற்றில் ஒன்றுதான் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலாகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் சோட்டானிக்கரை என்ற இடத்தில் இயற்கை சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த கோவில் போற்றப்படுகிறது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது. பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு.

    இந்த கோவிலில் மிகவும் சிறப்பு அம்சமாக ஒரே நாளில் 3 வித ரூபங்களில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதி ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும், நண்பகலில் சவுபாக்கியம் அருளும் அன்னை மகாலட்சுமி ரூபத்தில் ஆழ்சிவப்பு வண்ண உடையிலும், மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக கரும் நீலவண்ண உடையிலும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அருள் பாலிக்கிறார்.

    பக்தர்கள் மனம் சார்ந்த கோளாறுகள் கொண்ட தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து அன்னையை வழிபட்டு பூரணகுணம் பெற்று செல்வதை காணமுடிகிறது.

    குருதிபூஜை :

    சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பிரச்சித்தி பெற்ற பூஜைகளில் ஒன்று தான் குருதிபூஜையாகும். இந்த கோவிலின் கீழ்காவில் நடைபெறும் குருதிபூஜையில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்று செல்கிறார்கள்.
    முன்பு இங்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே குருதிபூஜை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த பூஜை ஒவ்வொரு நாளும் நடத்தப்படுவது சிறப்பாகும்.

    ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் சோட்டானிக்கரை மகம் என்ற திருவிழா மாசிமகத்தில் நடைபெறுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் இங்கு திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

    மாசி மகம் அன்று உச்ச பூஜைக்கு பின்னர் பகல் 2 மணிக்கு நடை திறக்கப்படும். அப்போது சர்வ அலங்காரத்துடன் தேவி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சர்வ அலங்காரத்துடன் காட்சியளிக்கும் தேவியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று குவிவார்கள்.

    திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதும், மாசி மகம் வழிபாடின் ஐதீகமாக இருக்கிறது. இங்கு தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா என்று பக்தர்கள் போற்றி பாடுகிறார்கள்.

    தல வரலாறு

    சோட்டானிக் கரை முன்பு மிக அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இங்கு ஆதிவாசிகள் அதிகளவு வாழ்ந்து வந்தனர். ஆதிவாசிகளின் தலைவனான கண்ணப்பன் என்பவர் பசுக்களை கொன்று அதன் இறைச்சி உண்பவராக இருந்தார். ஒரு நாள் அவரது மகள் தந்தையால் கொல்லப்பட இருந்த பசு மாட்டை காப்பாற்றினாள். மகள் மீது அதிக பாசம் கொண்ட கண்ணப்பன் அன்று முதல் தானும் பசுவை வதைப்பதில்லை என்று சபதம் செய்தார். ஆனாலும் அவர் முன்பு செய்த பாவம் காரணமாக அவரது அன்பு மகள் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கண்ணப்பன் கனவில் அவரது மகளால் காப்பாற்றப்பட்ட பசு தோன்றியது. தான் பசு வடிவில் வந்த தேவி என்றும், கண்ணப்பனின் மாட்டு தொழுவத்தில் தான் சிலையாக காட்சி அளிப்பதாகவும் அருகில் மகாவிஷ்ணு சிலையும் இருக்கும் என்று கூறி விட்டு அந்த பசு மறைந்து விட்டது.

    மறுநாள் தொழுவத்திற்கு சென்று பார்த்த கண்ணப்பன் அங்கு தேவி சிலையும், மகாவிஷ்ணு சிலையும் இருப்பதை பார்த்து அதை காவு (இயற்கை) கோவிலாக்கி வழிபாடு செய்யத் தொடங்கினார். ஆண்டுகள் பல உருண்ட போது, அந்த கோவில் புதர்கள் அடர்ந்து காடாக மாறியது. இந்த நிலையில் ஒரு பெண் புல்வெட்டும்போது அவரது அரிவாள் பட்டு விக்ரகத்தில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதுபற்றி அங்குள்ள பெரிய நம்பூதிரியிடம் தெரிவிக்கப்பட்டது.

    அவர் தேவபிரசனம் பார்த்து தேவியின் பெருமையை உணர்ந்து மீண்டும் வழிபாடு நடைபெற ஏற்பாடு செய்தார். அந்த தேவியே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறார். இந்த கோவிலுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாசல் இருந்தாலும் பெரும்பாலான பக்தர்கள் இங்குள்ள மேற்கு வாசல் வழியாகத்தான் பகவதியை தரிசிக்க வருகிறார்கள். கோவிலின் வலதுபக்கம் மகா மண்டபம் உள்ளது.

    இந்த மண்டபத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தால் மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை கண் குளிர தரிசிக்கலாம். குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பவர்கள் பிரகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் விசேஷ பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள்

    இங்கு 12 ஆயிரம் புஷ்பாஞ்சலி செய்வதும், அம்மனுக்கு சிவப்பு நிற பட்டுபுடவை காணிக்கையாக கொடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் இங்கு உயிர் பலி கொடுக்கப்பட்டாலும் தற்போது அது கைவிடப்பட்டு, சைவ வழிபாடு நடை பெறுகிறது. பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து நலம் பெற்று செல்கிறார்கள்.

    மாசி மாதம் நடைபெறும் மாசி மகம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் நவராத்திரி, கார்த்திகை மாதங்களிலும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. மண்டல பூஜை, அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் பிரசித்திப் பெற்றது.

    நடை திறக்கும் நேரம் :

    தினமும் காலை 4 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3.30 மணி முதல் பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும்.

    போக்குவரத்து வசதி :

    கேரள மாநிலம் எர்ணா குளத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் உள்ளது. எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகரம் என்று 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. ரெயில் மூலம் வருபவர்கள் இங்கிருந்து கோவிலுக்கு செல்ல பஸ் வசதி ஏராளமாக உள்ளது. தனியார் போக்குவரத்தும் நடைபெறுகிறது. திருப்புணித்துறா ரெயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் தான். சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் நெடும்பா சேரியில் விமான நிலையம் உள்ளது.

    போன் நம்பர் :

    சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலின் அலுவலக போன் நம்பர் : +91484-2711032.

    காவிரி வடகரையில் விளங்கும் வைணவத் திருத்தலம், பாவங்களையும் போக்கும் பெருமாள் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயம்
    காவிரி வடகரையில் விளங்கும் வைணவத் திருத்தலம், பாவங்களையும் போக்கும் பெருமாள், மன்னர்களும், மகான்களும் போற்றி வணங்கிய தலம், தோஷங்கள் நீங்கும் தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள கோழிக்குத்தி திருத்தலமாகும்.

    தல வரலாறு :

    பழங்காலத்தில் குடகுமலைப் பகுதியை, நிர்மலன் என்ற மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அவன் தொழு நோயால் பாதிக்கப்பட்டான். இதற்குப் பல்வேறு நாட்டின் மருத்துவர்களும் முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை. இதனால் மிகவும் மனம் வருந்திய மன்னன், மனம் போன போக்கில் பயணமானான்.

    அப்போது வழியில் முனிவர் ஒருவர், வீணையை இசைத்து பாடிக் கொண்டு இருந்தார். அவரைக் கண்டு வணங்கிய நிர்மலன் தன் நிலையை எடுத்துக் கூறித் தனக்கு வழிகாட்டுமாறு வேண்டி நின்றான். முனிவரும் அதற்கு மனமிரங்கி ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார். ‘இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் வழி கிடைக்கும்’ என்று கூறினார்.

    அதன்படி மன்னன் அதை நாள்தோறும் ஜெபித்தபோது, அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. ‘உனக்கு கடுமையான தோஷம் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் உன்னைப் பற்றியுள்ளது. காவிரிக்கரை வழியே பயணம் செய்து, வழியில் தென்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்தத் தீர்த்தத்தில் உனக்கு நோய் தீர்ந்து சரியாகிறதோ, அங்கேயே தங்கியிருந்து இறைவனை வழிபடு’ என்றது.

    இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன், அசரீரி கூறியது போலவே, காவிரிக் கரையில் உள்ள பல்வேறு திருக்கோவில்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்குளங்களில் நீராடினான். பின்னர் அடுத்த ஆலயத்தைத் தேடி பயணம் மேற்கொண்டான். ஆனாலும் மன்னனின் நோய் குணம் பெறவில்லை. மனம் சோர்ந்து மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கே மார்க்கசகாயேஸ்வரரை வணங்கி வேண்டி நின்ற போது, மீண்டும் அசரீரி ஒலித்தது.

    ‘நிர்மலா! மனம் கலங்காதே! உன்னுடைய தோஷம் நீங்கி, நீ பூரண குணமடையும் காலம் கனிந்துள்ளது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு! அதுவே உனக்கு விடுதலையைத் தரும்’ என்றது.

    அதனால், மனம் மகிழ்ந்த நிர்மலன் ஆலயமாகத் திருக்குளத்தினைத் தேடிய போது, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அழகிய திருக்குளம் தென்பட்டது. அதில் ஆனந்தமாக நீராடி எழுந்த போது நோய் தீர்ந்து, உடல் பொன் நிறமாய் காட்சியளித்தது.

    இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன் சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் நன்றி கூறி அங்கேயே வழிபடலானான்.

    அப்போது அவன் முன்பாக அத்திமரம் ஒன்று தோன்றியது. அதில் பிரமாண்ட வடிவில் சீனிவாசப்பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சி தந்து அருள் வழங்கினார்.

    நிர்மலன் இதே தலத்தில் தங்கி ரிஷியாக மாறினான். பிற்காலத்தில் பிப்பில மகரிஷி என அழைக்கப்பட்டார். இவர் நீராடி பேறு பெற்ற தீர்த்தம் ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    அத்திமரப் பெருமாள் :

    பிப்பில மகரிஷியின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், இத்தலம் வந்து பெருமாளைத் தரிசித்தான். தனக்கு போர்களின் மூலம் ஏற்பட்ட தோஷத்தை போக்கியருள வேண்டும் என்று வேண்டி நின்றான். இந்த மன்னனுக்கும், பெருமாள் அத்திமரத்தில் தோன்றி அருளாசி வழங்கினார்.

    மனம் மகிழ்ந்த மன்னன் தான் கண்ட காட்சியை சிலையாக வடிக்க விரும்பி பதினான்கு அடி உயர அத்திமரத்தில் அழகிய பெருமாளின் திருவுருவை அமைத்து புதிய ஆலயமும் எழுப்பினான் என்பது தலவரலாறு.

    மூலவர் அத்திமரப் பெருமாள் :


    வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத அதிசயமாக, இங்கே மூலவர் சீனுவாசப்பெருமாள் தனது திருக்கரங் களில் சங்கு, சக்கரம், கதை, அபய முத்திரையுடன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கி காட்சியளிக்கிறார். 14 அடி உயர அத்தி மரத்தில் பிரமாண்ட வடிவில் நின்ற கோலத்தில் அவர் அருள்கிறார். இத்தல இறைவன் மூலிகை வண்ணங்களால் மெருகேற்றப்பட்டுள்ளார். அத்தி மரத்தின் வேரே திருவடியாக அமைந்து நிற்பது அதிசய நிகழ்வாகும்.

    இங்கு அதே பெருமாள் பதினான்கு அடி உயரத்தில் வானை முட்டி நிற்கும் கோலத்தில் காட்சி தருவதால் இறைவனுக்கு வானமுட்டி பெருமாள் என்ற திருப்பெயரும் வழங்கப்படுகிறது. இவருக்கு பக்தப்பிரியன், வரத ராஜன் என்ற திருநாமங்களும் வழங்கப்படுகின்றன. (காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் திருக்குளத்தில் எளிய வடிவ அத்திவரதர் இருப்பது நினைவு கூரத்தக்கது.)

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய எளிய ராஜகோபுரத்தினைக் கொண்டு சிறிய ஆலயமாக அமைந்துள்ளது. கடந்த 2007–ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன் விமானம் குடை போன்ற அமைப்புடைய சந்திரவிமானம் அமைக்கப்பட்டுள்ளது. உள்மண்டபத்தில் மூலவருக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வாரும், இடதுபுறம் யோக நரசிம்மரும், கிழக்கு நோக்கி காட்சி தர, தெற்கு முகமாய் நர்த்தன கிருஷ்ணன் காட்சி தரு கிறார். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், விசுவக்சேனர், ராமானுஜர், பிப்பில மகரிஷி காட்சி தருகின்றனர். பிப்பில மகரிஷி அருளிய சனி காயத்ரி மந்திரம், சீனிவாசப் பெருமாளின் தியான ஸ்லோகம் ஆகியவை ஆலய வழிபாட்டின் போது ஓதப்படுகிறது.

    சப்தஸ்வர அனுமன் :
     
    இக்கோவிலில் அமைந் திருக்கும் அனுமன் சிலையைத் தட்டினால், ஏழு ஸ்வரங்கள் ஒலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் சப்தஸ்வர அனுமன் என அழைக்கப்படுகிறார். வாலைச் சுருட்டி தலையில் வைத்துள்ள கோலத்தில் காட்சியளிக்கிறார். வாலின் நுனியில் மணி தொங்குவது கண்டு ரசிக்கத்தக்கது. இவர் இசை நாட்டியத்திற்கு ஆசி வழங்குபவர் என்பது கூடுதல் சிறப்பு. தலமரம் அத்திமரமாகும்.

    தலத் தீர்த்தம் விஸ்வ புஷ்கரணி. கோடான கோடி பாவங்களையும் தீர்க்கும் இறைவராக வாரனமுட்டி பெருமாள் விளங்குகின்றார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவருக்கு கண்கண்ட தலமாக இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கலைத்துறையினருக்கு புகழும், வளமும், சேர்க்கும் ஆலயமாகவும் இது போற்றப்படுகிறது. காலை 6 மணிக்கு நண் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இங்கு ஆலய தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், கோழிக்குத்தி அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சோழன்பேட்டையை ஒட்டி அமைந்துள்ளது, கோழிக்குத்தி. மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் சோழன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே அரை கிலோமீட்டர் நடைபயணத்தில் கோழிக்குத்தி திருக்கோவிலை அடையலாம்.

    இத்தலத்தைச் சுற்றி திருவேள்விக்குடி, திருமணஞ்சேரி உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்களும் அமைந்துள்ளன. 
    காஞ்சிபுரம் என்று மக்கள் நினைத்து உடன் 1. பட்டுப்புடவை 2. காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் 3. வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகியவை மக்களுக்கு நினைவிற்கு வரும்.
    சுவாமி : வரதராஜ பெருமாள்.
    அம்பாள் : பெருந்தேவி தாயார்.
    தீர்த்தம் : வேகவதி ஆறு, அனந்தசரஸ்.
    விமானம் : புண்ணியகோட்டி விமானம்.

    தலச்சிறப்பு :

    இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது. காஞ்சியில் தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார். பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.

    தல வரலாறு :

    தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக் பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில் இது ஆகும். காஞ்சிபுரம் என்று மக்கள் நினைத்து உடன் 1. பட்டுப்புடவை 2. காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் 3. வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகியவை மக்களுக்கு நினைவிற்கு வரும். 108 திவ்ய தேசங்களுள் கோயில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், திருமாலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும்.

    வைணவ மதம் வளர்க்கப்பட்ட தலம் :

    ஒரு சமயம் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்தார் மகாவிஷ்ணு எனவே அவருக்கு வரதர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். யாகத்தில் அளித்த அவர்ப் பாகத்தை ஒரு சித்திரை மாத திரிவோண நன்நாளில் நாராயணன் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கர, கதையுடன் தோன்றி ஏற்றுக் கொண்டார்.

    ஸ்ரீ மந்நாராயணன் புண்ணியக்கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்நாள் சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும். அந்நாளில் தேவர்கள் ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாராயணன் சம்மதித்தார். உடன் ஐராவதம் என்ற யானையே மலை வடிவில் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றது. இதனால் இதற்கு அத்திகிரி என்று மற்றொரு பெயரும் ஏற்பட்டது.

    வைய மாளிகைப் பல்லி :

    ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கெளதம் முனிவரிடம் வித்தைப் பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழம் புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்து விட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கெளதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதை பெற்றுக் கொண்ட போது அதில் இருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.

    அதைக் கண்டு கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது என்று சாபம் அளித்தார். இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி அறியாமையால் தவறு நடந்து விட்டது எங்களை மன்னித்து, பாபவிமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர். உடனே முனிவர் சாந்தம் அடைந்து இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதனை தரிச்சிக்க இச்சந்நிதியில் நுழைவான் அச்சமயம் உங்கள் சாபம் அகலும் என்று கூறினார்.

    அதன் பின்பு ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்தலதிற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் (யானை வடிவில்) வடிவம் கொண்டு இத்தலத்தில் நுழைந்த உடன் இவர்களின் சாபம் அகன்றது என்பது, பல்லியின் புராண வரலாற்றுச் சான்றோர்கள் கூறுகின்றனர்.

    அத்திவரதர் : இத்திருக்கோயிலினுள், வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில், அத்தி மரத்தால் செய்யப்பட்ட, கிடந்து நிலையில் உள்ள அத்திவரதர் சிலையை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்த முறைப்படி பூஜைகள் செய்து, ஒரு மண்டலகாலம் பொது மக்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கமாக உள்ளது. கடைசியாக 1979 ஆம் அண்டு எடுக்கப்பட்ட பொது மக்களின் பார்வைக்கும், தரிசனத்திற்கும் வைக்கப்பட்டது.

    நடைதிறப்பு :

    காலை 7.30 மணி முதல் 12.30 வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

    கோயில் முகவரி :

    அருள்மிகு தேவராஜ் சுவாமி திருக்கோவில் (ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்),
    விஷ்ணுகாஞ்சி,
    காஞ்சிபுரம்,
    காஞ்சிபுரம் மாவட்டம்.

    தொலைபேசி எண்: 044 - 2726 9773.
    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
    மூலவர் : திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்
    அம்மன்/தாயார் : மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி
    தல விருட்சம் : வில்வம்,. கஸ்தூரி,அரளி
    தீர்த்தம் : அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
    புராண பெயர் : திருநெடுங்களம்
    ஊர் : திருநெடுங்களம்
    மாவட்டம் : திருச்சி

    பொது தகவல் :

    பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பு. நடராஜருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. நால்வருக்கும் அவரவர்க்குரிய திருநட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.

    சிறப்பம்சம் :

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

    பிரார்த்தனை :

    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

    நேர்த்திக்கடன் :

    சுவாமி, அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    தல சிறப்பு :

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 71 வது தேவாரத்தலம் ஆகும்.

    கோயில் இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. கோயில் முதல் வாயிலில் கோபுரம் கிடையாது.

    இரண்டாவது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    தல வரலாறு:

    சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

    திருநெடுங்களம் என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர் என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி:

    அருள்மிகு திருநெடுங்களநாதர்,
    திருநெடுங்களம்-620015
    திருச்சி மாவட்டம்.
    ×