search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவில்
    X
    செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவில்

    செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவில்

    கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி கோவில்.
    அக்காலத்தில் சரியான சாலைகள் இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாலும், செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியம் என்ற சிற்றூர் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியாக இருந்தது. இதனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்து கடவுள் சிலைகளை பாதுகாக்க, இந்த ஊரை நம் முன்னோர்கள் தேர்வு செய்தனர்.

    பல புகழ்பெற்ற ஊர்களில் உள்ள கோவில் விக்கிரகங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டன. அதிகமாக வெளியில் தெரிந்தால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பெரியோர் அஞ்சியதாலும், ஏராளமான பொதுமக்களுக்கு செட்டிப்புண்ணியத்தில் மறைந்திருந்த பெறற்கரிய தெய்வீகப் பொக்கிஷங்கள் பற்றி அதிகமாக தெரியாமலேயே போய்விட்டன.

    இருப்பினும், கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி அங்கிருப்பதை அறிந்திருந்த பலர், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும், ஒழுக்கமும், மனத்தூய்மையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வந்து தரிசித்தவண்ணம் இருந்தனர்.

    அக்காலத்திலிருந்தே செட்டிப்புபண்ணியத்திற்கு சாலை வசதிகள் கிடையாது. ஆதலால், எவ்விதமாவது இத்திருத்தலம் எம்பெருமான்களைத் தரிசித்தே ஆகவேண்டும் என்ற மன உறுதி இருந்தவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுடன் செட்டிப்புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்தது. இங்கு 350 ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.

    பிறகு சிரஸ்தார் ராவ்சாஹிப் ரங்காச்சார் சுவாமி ப்ரயத்தனத்தில் கடலூர் அருகே உள்ள திருவேந்திரபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதிசுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து தம் கிராமமாகிய செட்டிப்புண்ணியம் கிராமத்தில் கீலக வருடம் வைகாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் எழுந்தருள வைத்தார்.

    இப்பெருமாள் நித்ய ஆராதனத்துடன் 1848-ம் ஆண்டு வைகாசி மாதம் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அவ்வூருக்கு எழுந்தருளினார். அவருடன் ஸ்ரீயோக ஹயக்ரீவரும் எடுத்து வரப்பட்டார். இதுகுறித்த தகவல் அப்போதைய தெற்கு ஆற்காடு அரசு கெஜெட்டில் வெளிவந்தது தெரிகிறது.

    அதன்பின் இக்கோவிலில் தாயார் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீஅண்டாள் அகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்பாளிக்கின்றனர். ராமஸ்வாமி ஐயங்கார் தனது முயற்சியால் தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்து ஸ்ரீராமன், சீதை, லஷ்மணன் ஹனுமன் சுவாமிகளை 1868-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி வண்டலூருக்கு எடுத்து வந்தார்.

    அதன்பின் ராமசுவாமி ஐயங்கார் பெங்களூர் செல்வதற்கு முன் ஸ்ரீராமன், சீதை லஷ்மணன், ஹனுமமன் சுவாமிகளை தனது சொந்த கிராமமான செட்டிபுண்ணியத்திற்கு கொண்டு வந்தார். தற்போது வரதராஜசுவாமி கோவிலில் தனி சன்னதியுடன் ஸ்ரீராமன், சீதை, லஷ்மணன், ஹனுமன், சுவாமிகள் அருள்பாளிக்கின்றனர்.

    மூலம்: ஸ்ரீவரதராஜப் பெருமாள்
    உற்சவர்: ஸ்ரீதேவநாத சுவாமி
    தாயார்: ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார்
    ஆகமம்: ஸ்ரீவைகாணசம்

    சென்ற சில ஆண்டுகளாக ஸ்ரீயோக ஹயக்ரீவர், ஸ்ரீதேவநாதப்பெருமான் திருவருளினால் அனைத்து மக்களும் கல்வித்திறன், ஞாபகத் திறன், கிரகிப்புச்சக்தி, தூய்மையான மனம், ஒழுக்கம் ஆகியவற்றைத் தவறாது தந்தருளும் சக்தி இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவருக்கு உள்ள அற்புத சக்தியை உணர்ந்தனர். அதனால் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து தரிசித்ததன் பலனாக ஏராளமான மாணவர்கள் அவர்களது கல்வித் துறைகளில் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

    அநேக காலத்திற்கு பிறகு 3.2.1993 பாலாலயம் நடந்தது. 17.5.93 அன்று அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோஷணம் நடந்தது. இதற்கு முன் 100 வருடத்திற்குள் ஸம்ப்ரோஷணம் நடந்ததாக தெரியவில்லை என பெரியோர்கள் சொல்ல கேள்வி.

    திருவிழாக்கள் :

    தை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை திருப்பார்பேட்டை உத்சவம் கிராமத்தாரால் நடத்தப்படுகிறது. தவிர கோவிலில் ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளை மூலமாக தை வெள்ளி ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீதேசிகன் சாத்துமுறை, பெருமாள் அவதார உத்சவம் (வைகாசி மகம்) தீபோத்சவம் நடக்கின்றன. சத்யயன உத்சவம் சாத்துமுறை விஜயதசமி ஆடிப்பூரம் பங்குனி உத்திரம் உடையவர் சாத்து முறை, ஸ்ரீராமநவமி உத்சவங்கள் உபயகாரர்கள் மூலமாக நடைபெறுகிறது.

    எப்படி, எப்போது செல்ல வேண்டும்?

    சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பிற்கு எதிரில் (லைட் ரூபிங் பேக்டரி) மேற்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் செட்டிப்புண்ணியம் கோவில் உள்ளது.

    இங்கு செல்லும் பஸ் (60சி) தாம்பரத்தில் இருந்து வடகால் என்ற பெயர் பலகையுடன் காலை 10 மணி, மதியம் 1.40 மணி, மாலை 6.20 மணி, இரவு 9.10 மணி, காலை 8 மணி, மாலை 4  மணிக்கு புறப்படும்.

    செட்டிப்புண்ணியத்திலிருந்து தாம்பரத்திற்கு காலை 6.40 மணி, மதியம் 11.20 மணி, மாலை 2.55 மணி, இரவு 7.40 மணி. காலை 9 மணி, மாலை 5 மணிக்கு பஸ் புறப்படும்.

    தாம்பரம்-செங்கல்பட்டு பஸ்சில் சிங்கப்பெருமாள் கோவிலில் இறங்கி ஆட்டோ வைத்துக் கொள்ளலாம்.

    கோவில் திறந்திருக்கும் நேரம் :

    காலை 7.30 மணி முதல் 12 மணி வரை
    மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.

    புதன், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கோயில் அதிக நேரம் திறந்திருக்கும்.

    ஹயக்ரீவர் கோவில் போன் நம்பர் :

    செட்டிபுண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் கோவிலை தொடர்பு கொண்டு பூஜை முறைகள் மற்றும் வழிபாடு நேரம் குறித்து முன்னதாகவே உறுதி செய்து கொள்ள விரும்புபவர்கள், 86751 27999 - என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல்களை பெறலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×