என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில்
    X

    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில்

    தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார்.
    மூலவர் : தாயுமானவர்
    அம்மன்/தாயார்  : மட்டுவார்குழலி
    தல விருட்சம்   : வில்வம்
    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
    ஆகமம்/பூஜை  : காரணம், காமீகம்
    பழமை  : 1000-2000 வருடங்களுக்கு முன்
    புராண பெயர் : சிரபுரம், மலைக்கோட்டை
    ஊர்  : திருச்சி

    திருவிழா :

    சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி.

    தல சிறப்பு :

    பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69  வது தேவாரத்தலம் ஆகும்.

    சிறப்பம்சம் :

    பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன்  சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    பொது தகவல் :


    இத்தலவிநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. மலையில் அமைந்த இக்கோயிலில், குன்றின் மத்தியில் ஒரு பிரகாரம் இருக்கிறது. இதை, மேல்வீதி  என்றும், மலையைச் சுற்றி அடிவாரத்திலுள்ள வீதியை, கீழ்வீதி என்றும் சொல்கிறார்கள். விழாக்களின்போது இவ்விரண்டு வீதிகளிலும் சுவாமி உலா செல்வார்.

    நவக்கிரக மண்டபத்தில் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் சூரியன் காட்சி தருகிறார். இம்மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனை நோக்கி திரும்பியிருக்கின்றன. மலை அடிவாரத்தில் மாணிக்கவிநாயகர்  இருக்கிறார். தனிச்சன்னதியிலுள்ள முத்துக்குமாரசுவாமியை, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு அருகில், ஒரு பள்ளத்திற்குள், பாதாள அய்யனார் இருக்கிறார்.

    பிரார்த்தனை :

    திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை.சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்:

    சிவன், அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, வாழைத்தார் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

    தலபெருமை :

    உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.

    வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, செவ்வந்தி நாதர் என்ற பெயரும் உண்டு.

    முகவரி :

    தாயுமானவர் திருக்கோயில்
    திருச்சி - 620002

    போன் நம்பர் : +91 4312704621
    Next Story
    ×