என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    குழந்தை பாக்கியத்தை இயற்கையிலே வாய்க்கப்பெறாத பெண்கள் சந்தான லட்சுமி விரதத்தையும் சந்தான கிருஷ்ண விரதத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
    குழந்தை பாக்கியத்தை இயற்கையிலே வாய்க்கப்பெறாத பெண்கள் சந்தான லட்சுமி விரதத்தையும் சந்தான கிருஷ்ண விரதத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    வளர்பிறையும் நல்ல திதியும் அமைந்த நல்ல ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் ஓர் அறையில் கிழக்கு முகமாக பீடமமைத்து, நெல்லைப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு தட்டை வைக்க வேண்டும். அதில் பச்சரிசி பரப்ப வேண்டும். பச்சரிசித் தட்டில் கலசம் வைத்து, கலசத்தில் முழுவதும் நீர் ஊற்றி மாவிலையும் தேங்காயும் வைக்க வேண்டும். முகமில்லாமல் ஒரு வட்டமாய் இருக்கும் வாழைப்பூ குத்துவிளக்கைக் கலசத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.

    சந்தானலட்சுமி, தானியலட்சுமி, சந்தான கிருஷ்ணன் ஆகிய தெய்வ பூஜைக்கு இந்த விளக்கைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது சாஸ்திர விதி. ஞாயிற்றுக்கிழமை சூரியன் தோன்றுவதற்கு முன், இவற்றைத் தயாராக வைத்திருந்து, சூரியன் தோன்றும் வேளையில் விநாயகர் பூஜையைத் தொடங்க வேண்டும்.

    கலச பூஜையைத் தனலட்சுமி ஸ்தோத்திரங்களைச் சொல்லி, கற்பூர தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். திருவிளக்குப் பூஜையை அஷ்டோத்ர ஈத நாமாவளி சொல்லிப் பூஜை செய்து வணங்க வேண்டும். தனலட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லிக் கலசத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

    பூஜை முடிந்தவுடன், கணவனும், மனைவியும் ஒன்றாகத் தட்டைப்பிடித்துக் கற்பூர தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். இருவரும் சேர்ந்தே உடலின் எட்டு உறுப்புகளும் தரையில்படும்படி (அஷ்டாங்க) ஆணும் ஆறு உறுப்புகளும் தரையில் படும்படி பெண்ணும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    கணவன்-மனைவி இருவர் மட்டுமே செய்யும் இந்த பூஜை முடிந்ததும், அக்கம் பக்கமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்துவரச் சொல்லி, பூஜை பீடத்தைச் சுற்றி அமரச் சொல்ல வேண்டும். பின்பு, மீண்டும் கலச பூஜை, கற்பூர தூப தீபம் காட்டி வணங்கிவிட்டு, பிரசாதங்களுள் பசுவின் பால், தேன், இளநீர், எள் உருண்டை ஆகியவை தவிர மற்றவற்றைக் குழந்தைகளுக்கத் தரவேண்டும்.

    கணவனும், மனைவியும், எள் உருண்டைகளை உண்டு விட்டு, பால், தேன், இளநீர் ஆகியன கலந்த சந்தான பானத்தை அருந்த வேண்டும்.

    இந்த முறைப்படி, கரு தோன்றும் வரை பதினொரு வாரம், பதினாறு வாரம், இருபத்தொரு வாரம், நாற்பது வாரம், நாற்பத்தெட்டு வாரம் என விரதம் இருக்கலாம். ஒரே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனலட்சுமி விரதத்தையும் புதன்கிழமை சந்தானகிருஷ்ண விரதத்தையும் கடைபிடிக்கலாம்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    லட்சுமி கடாட்ச சக்கரத்தை விரதமிருந்து 45 நாட்கள் பூஜை செய்து வந்தால் லட்சுமி கடாட்சம் குறைவின்றி கிடைக்கும்.
    லட்சுமி கடாட்சம் குறைவில்லாமல் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன்கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக அரிய மந்திரத்தை தந்துள்ளார். இந்த மந்திரத்தை தினந்தோறும் 1008 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.

    லட்சுமி கடாட்ச சக்கரத்தை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்துப்படுத்துக் கொண்டால் நாம் விரும்பிய பொருளை அடையும் வழிமுறைகளை கனவு மூலம் அறிந்துக் கொள்ளலாம். தேவிக்கு நிவேதனமாகப் பால் பாயசத்தை படைக்கலாம்.

    இந்த சக்கரத்தை வெள்ளி அல்லது செப்பு தகட்டில் பதித்துப்பூஜை செய்து வீட்டில் பூஜையறையில் சட்டம் போட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் குறைவின்றிக்கிடைக்கும்.

    ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் எழுதி வரலாம். நல்லபலன்கள் கிடைக்கும்.
    சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால், அவன் அருளால் குழந்தைப்பேறு உண்டாகும்.
    ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் ‘சஷ்டி விரதம்’ அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை நினைத்து வழிபட சிறந்ததாகும். இந்த ஆறு நாட்களில்தான் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகியோருடன் போரிட்டு, முருகப் பெருமான் தேவர்களை காத்தருளினார்.

    சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்த சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் ஆகியோர் பல்வேறு வரங்களைப் பெற்றனர். அந்த வரம் அவர்களுக்கு ஆணவத்தையும் கொடுத்தது. அசுரர்கள் மூவரும் தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினர். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று, தங்களைக் காத்தருளும்படி வேண்டினர். சிவபெருமானும் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அந்த 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று பொய்கையில் சேர்த்தார்.

    அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருமாறின. அந்த அறுவரையும் கார்த்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். சூரபதுமனை வதம் செய்யும் காலம் நெருங்கிய வேளையில், பார்வதி தேவி, ஆறு பேரையும் ஒரே உருவாக மாற்றினார். இதனால் முருகப்பெருமானுக்கு ‘கந்தன்’ என்ற பெயர் ஏற்பட்டது. கந்தன் என்னும் சொல்லுக்கு ‘ஒன்று திரட்டப்பட்ட’ என்பது பொருளாகும். ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக மாறியதால், முருகப்பெருமானுக்கு இப்பெயர் வந்தது.

    பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கி சூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தார். முருகப்பெருமான் தன்னுடைய படைகளுடன், அசுரப்படைகளை எதிர்த்துப் போரிட்டார். ஆறுநாட்கள் நடந்த போரில், இறுதிநாளான சஷ்டி அன்று சூரபதுமனை வேல் கொண்டு, இரண்டு கூறுகளாக பிளந்தார் ஆறுமுகன். அந்த இரு பகுதிகளில் ஒன்றை மயிலாக மாற்றி தனது வாகனமாகவும், மறு பகுதியை சேவல் கொடியாகவும் ஆக்கிக்கொண்டார்.

    இந்தக் கதை தனக்குள் ஒரு தத்துவத்தைக் கொண்டுள்ளது. இறைவனை உணரவிடாமல், ஒவ்வொருவரிடமும் மாயை, கன்மம், ஆணவம் ஆகியவை ஆட்டிப் படைக்கின்றன. அவை ஒடுங்கினால்தான் இறைவனை உணர முடியும். அவையே சிங்கன், தாரகன், சூரபதுமன். இந்த மூன்றையும் நீக்கிய ஆத்மாவை, இறைவன் தன்னோடு இணைத்துக் கொள்கிறான் என்பதையே இந்தக் கதை உணர்த்துகிறது.

    பகைமையை வெல்வது அல்ல சஷ்டி விரதம். பகைமையை மாற்றி, ஞானம் பெறச் செய்வதே சஷ்டி விரதத்தின் சிறப்பு. இது ஞானத்திற்கான திருவிழா. சூரபதுமனை அழிப்பது ஆணவத்தை அழிப்பதாக கருதப்படுகிறது. கந்த சஷ்டி விழா, முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட சகல முருகன் ஆலயங்களிலும் நடைபெறும் முக்கிய விழாவாகும்.

    விரதம் இருப்பது எப்படி?

    பூஜை அறையை சுத்தம் செய்து, அறுங்கோணக் கோலம் வரைய வேண்டும். அந்த கோலத்தின் மீது குத்துவிளக்கை வைத்து, விளக்கேற்றி முருகப்பெருமானை பூஜிக்க வேண்டும். தவிர ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொள்ளலாம். இந்த விரதத்தை தங்களின் உடல் நிலைக்கு தக்கவாறு அனுஷ்டிக்கலாம்.

    ஆறுநாட்களும் எந்தவித அன்ன ஆகாரம் இன்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்கள் ஒரு நேரம் உணவு உண்டு, கடைசி நாளில் முழு உபவாசம் இருந்தும் விரதத்தை மேற்கொள்வார்கள். இறுதிநாள் முழுவதும் கண் விழித்து முருகப்பெருமானின் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    இந்த விரதத்தை மேற்கொண்டால், குடும்பத்தில் நிலவும் துன்பங்கள் விலகும். வேலைவாய்ப்பு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். மேலும் இந்த விரதத்திற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு. ‘சஷ்டியில் இருந்தால் அகப்பை (கரு)யில் வரும்’ என்பது பழமொழி. ஆம்.. சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால், அவன் அருளால் குழந்தைப்பேறு உண்டாகும். பெண்களுக்கு இந்த விரதம் மிகவும் சிறப்புக் குரிய விரதமாகும்.
    கந்த சஷ்டி விரதம் இன்று தொடங்குகிறது. இந்த விரதத்தை எப்படி முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

    அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் “ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்” எனப்படுகிறது. பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார். அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூரபத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.

    கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

    இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்;த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச் சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக் கொள்ள வேண்டும்.

    விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.

    கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கேதாரீஸ்வரரை வழிபடும் கேதாரி-கவுரி விரதம் நடைபெறுவது வழக்கம்.
    ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கேதாரீஸ்வரரை வழிபடும் கேதாரி-கவுரி விரதம் நடைபெறுவது வழக்கம். அதாவது பார்வதி தேவி ஐப்பசி மாத அமாவாசை நாளில் பூமிக்கு எழுந்தருளி சாமியை வழிபட்டதை நினைவுக் கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த ஐப்பசி அமாவாசை அன்று பெண்கள் சிவனாகிய கேதாரீஸ்வரரை அர்ச்சனை செய்து வழிபடும் நாள் இந்த கேதாரி-கவுரி விரதநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்படி காரைக்காலை சேர்ந்த தலத்தெருவில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசாமி கோவிலில் கேதாரி-கவுரி விரதத்தை முன்னிட்டு சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து குடும்பம் தழைக்கவும், ஊர் சுபிட்சம் பெற வேண்டியும் தீபாவளிக்கு மறுநாளான நேற்று வந்த அமாவாசை தினத்தில் பெண்கள் விரதமிருந்து கேதாரீஸ்வரரை மலர்களால் பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் காரைக்கால் அம்மையார் எழுந்தருளியுள்ள சோமநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் பெண்கள் கேதாரி-கவுரி விரதம் இருந்து கேதாரீஸ்வரரை வழிபட்டனர்.
    வறுமையை நீக்கும் கேதார கவுரி விரதம் இன்று (30-10-2016) கடைபிடிக்கப்படுகிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    இமயமலையில் உள்ள வயல்பகுதியில் சிவபெருமான் சுயம்புவாக தோன்றினார். வயல், விளை நிலம் வடமொழியில் ‘கேதாரம்’ என்று அழைக்கப்படுகிறது. வயல் பகுதியில் தோன்றியதால் ஈசனுக்கு ‘கேதாரநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகைக்கு ‘கவுரி’ என்ற பெயர் உண்டு. ஈசனை வேண்டி அம்பாள் இருந்த விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று கூறப்படுகிறது.

    இந்த விரதத்தை அம்பாள் மேற்கொண்டதற்கான காரணம் ஒன்று உள்ளது. அது பற்றி பார்க்கலாம்.

    பிருங்கி முனிவர், சிறந்த சிவ பக்தராக இருந்தார். ஒருமுறை கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டுமே வலம் வந்து வணங்கினார். இது அம்பாளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    ‘முனிவரே! என்னை புறக்கணித்து விட்டு சிவனை மட்டும் வணங்கியதால், நீர் சக்தியின்றிப் போவீர்’ என்று அன்னை சாபமிட்டார்.

    உடனடியாக முனிவர், சக்தி அனைத்தையும் இழந்து நிற்க முடியாமல் நிலத்தில் விழுந்தார். அவருக்கு சிவபெருமான் ஊன்றுகோலைக் கொடுத்து உதவினார்.

    முனிவருக்கு சாபம் கொடுத்த பின்பும் கூட அம்பிகையின் மனம் அமைதி கொள்ளவில்லை. ‘நானும் இறைவனும் தனித்தனியாக இருந்ததால் அல்லவா, முனிவர் ஈசனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இருவரும் ஒன்றாகி விட்டால் இப்படி நடக்காது’ என்று நினைத்த அம்பாள், திருக் கயிலாயத்தில் இருந்து பூலோகம் வந்தார். அங்கு கவுதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்.

    கவுதமரிடம், கயிலாயத்தில் நடந்த விஷயங்களை தெரிவித்த பார்வதிதேவி, ‘நான் இறைவனுடன் ஒன்றாகிப் போவதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

    அதற்கு கவுதம முனிவர், ‘தாயே! கேதார கவுரி விரதம் என்ற ஒரு விரதம் இருக்கிறது. அந்த விரதத்தை நீங்கள் 21 நாட்கள் கடைப்பிடித்தால், இறைவன் உங்களுக்கு தனது உடலின் பாதியை தந்து அருள்வார்’ என்று கூறினார்.

    பார்வதிதேவியும் அந்த விரதத்தை கடைப்பிடித்து, ஈசனின் இடப்பாகத்தைப் பெற்று ‘அர்த்தநாரீஸ் வரர்’ ஆனார்.

    அப்பொழுதும் தனது தவ ஆற்றலை பயன்படுத்தி வண்டாக மாறிய பிருங்கி முனிவர், அர்த்தநாரீஸ்வரரின் மார்பின் ஊடாக துளைத்துச் சென்று சிவனை மட்டுமே வலம் வந்து வழிபட்டார். ஆனால் இப்போது அம்பாள் கோபம் கொள்ளவில்லை. மாறாக, பிருங்கியை ஆசீர்வதித்து தனது புத்திரனாக்கிக் கொண்டார். மேலும் தான் கடைப்பிடித்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் அருள் வழங்கும்படி, சிவபெருமானை வேண்டினார் பார்வதிதேவி. இறைவனும் அவ்வாறே அருளினார்.

    விரதம் இருக்கும் முறை

    கேதார கவுரி விரதத்தின் தொடக்க நாளில் ஒரு வெற்றிலை, ஒரு பாக்கு, ஒரு பழம், பலகாரம், அன்னம் முதலியவற்றை வைத்து இறைவனையும், அம்பாளையும் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கையை ஒவ்வொன்றாக அதிகரிக்க வேண்டும். கடைசி நாள் அன்று 21 எண்ணிக்கையில் பொருட்களை வைத்து வழிபடுவதோடு, 21 இழையினால் ஆன நோன்புக் கயிற்றைத் தயாரித்து, அந்தக் கயிற்றுக்கு தீபம் காட்டி பூஜிக்க வேண்டும். பின்னர் அந்த கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

    தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், கேதார கவுரி விரத நாள் அன்று, உபவாசம் இருந்து, தூக்கத்தை விடுத்து, அடுத்த நாள் சுவாமி- அம்பாளை பாராயணம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை கடைப் பிடிப்பதால் வறுமை நீங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    செல்வமும், செல்வாக்கும் கிடைக்க தீபாவளிக்கு லட்சுமி விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    “காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
    வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேள்வணிகர் - வீடுகட்கு
    அன்றைக்கு வந்த எங்கள் அம்மா லட்சுமியே
    என்றைக்கும் நீங்காதிரு”

    தீபாவளி பண்டிகையை நாம் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவதோடு நின்று விடக்கூடாது. செல்வமும், செல்வாக்கும் தரும் லட்சுமியை நாம் அன்று அவசியம் பூஜித்து வழிபட வேண்டும்.

    தமிழகத்தில் நிறைய பேர் தீபாவளி தினத்தன்று லட்சுமி வழிபாட்டை சிரத்தையாக, உளமாற செய்வதே இல்லை. தீபாவளியன்று நாம் எந்த அளவுக்கு லட்சுமி பூஜையை செய்கிறோமோ அந்த அளவுக்கு நமது வீடு லட்சுமி கடாட்சமாக மாறும். அத்தகைய லட்சுமியை நாம் ஒவ்வொருவரும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதிபராசக்தி தன்னிடமிருந்து தன்னைப்போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இடது பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி; வலது பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி. ‘ரமா’ என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகா லட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார்.

    மகாலட்சுமி அப்போது செல் வத்தின் நாயகியாகச் செயல் படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்தினி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது. மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர்.

    தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள். பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றினர். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர்.

    காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். ‘’நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரண மில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த செல்வங்களை பெற அருள்புரிவாள்’’ என்று மகா விஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.

    இதையடுத்து பாற் கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள்.

    தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர் களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பி னார்கள். அப்போது மகாலட்சுமி, ‘’என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்’’ என்று கூறினாள்.

    அதன்படி, யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். மகாலட்சுமியின் பெரு மையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளி டமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர்.

    தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் குபேரருக்குத் தரப்பட்டுள்ளது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார்.

    சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு போன்ற பிரச்சனைகள் தீர லட்சுமி நரசிம்மருக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    நரசிம்மரை நினைத்து அதிகாலை குளித்து, வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும்.

    விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம். அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’.

    நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன். இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும்.

    காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது.

    இதை முறையாக கடைபிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும்.

    இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    8 திசைகளிலும் புகழ் கிடைக்க நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் விரதமிருந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.
    நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து விரதமிருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை விரதமிருந்து வழிபடுவது நல்ல பலனை தரும்.
    விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும்.
    விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். எனவே மற்ற தமிழ் மாதங்களுடன் ஒப்பிடுகையில் புரட்டாசி மாதத்தில்தான் நிறைய பேர் விரதம் மேற்கொள்வதுண்டு.
    அதற்கு ஏற்ப புரட்டாசி மாதத்தில் 9 விதமான விரத வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அந்த 9 விதமான விரதங்கள் பற்றி காணலாம்.

    கேதார கவுரி விரதம் :

    அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு. புரட்டாசி மாத வளர்பிறை தசமி தொடங்கி ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரையுள்ள 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். சாஸ்திர நியமங்களின்படி இந்த விரதம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவது எனினும், தற்போது ஐப்பசி மாத அமாவாசையன்று மட்டும் பெரும்பாலானவர்கள் அனுஷ்டிக்கிறார்கள்.
    திருக்கயிலையில் சபா மண்டபத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். தேவலோகத்தினர் இறைவனையும், தேவியையும் வணங்கிச் சென்றவண்ணமிருந்தனர்.

    அப்போது பிருங்கி முனிவர், பிற முனிவர்கள் புடைசூழ மண்டபத்திற்கு வந்தார். தம் வழக்கப்படி உமாதேவியைத் தவிர்த்துவிட்டு இறைவனை மட்டும் வலம்வந்து வணங்கினார்.

    முனிவர் தன்னை வணங்காததால் கோபம்கொண்ட தேவி இறைவனை நோக்கி, “”திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் என்னை வணங்கும்போது பிருங்கி முனிவர் மட்டும் என்னை வணங்கு வதில்லையே’’ என்றாள்.

    இறைவன், “”நாயகியே, உலகத்தில் காமியம், மோட்சம் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. காமியத்தை விரும்புபவர் உன்னையும் என்னையும் பூஜித்து உன்னருளால் போக போக்கியங்கள், அழகு, நிணம், குருதி, தசை முதலியவற்றைப் பெற்று உலக இன்பத்தை அனுபவித்து முடிவில் உனது பதவியையும் பெறுவர். மோட்சத்தை விரும்புபவர்கள் என்னை மட்டும் பூஜிப்பர். அத்தன்மையால் பிருங்கி முனிவர் என்னை மட்டும் வணங்குகிறார். நீ கோபம் கொள்ளாதே’’ என்றார்.

    இதனைக்கேட்ட தேவி, “”எனது அம்சங்களை விட்டுவிட்டு அவர் மோட்சம் அடையட்டும்‘’ என்று கூறினாள். தேவி கூறியதைக் கேட்டு முனிவர் தன் தவ வலிமையால் தேவியின் அம்சங்களான தசை, குருதி, நிணம் முதலியவற்றை உதிர்த்து வெறும் எலும்புருவானார். சிவபெருமான் அவரது தவ வலிமைக்கிரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றையும், தேவை யான வலிமையையும் கொடுத்தருளினார்.

    தன்னைத் துதிக்காத பிருங்கி முனிவரை இறைவன் ஆட்கொண்டதால் தேவியானவள் நாணி, கயிலாயத்தை விட்டிறங்கி பூவுலகிலுள்ள தண்டகாரண்யம் சென்றடைந்தாள். மழையின்மையால் வறண்டிருந்த தண்டகாரண்ய வனம் தேவியின் வருகையால் செழிப்புற்றது. வனத்தில் ஏற்பட்டிருந்த ரம்யமான மாற்றத்தைக் கண்டு, அங்கு தவம் செய்துகொண்டிருந்த கௌதம முனிவர் தேவியின் வருகையை உணர்ந்தார். தேவியை எதிர்கொண்டழைத்து வணங்கினார்.

    கயிலையிலிருந்து தான் பூலோகம் வந்ததற்கான காரணத்தைக் கூறி தன் தவறை உணர்ந்தவளாய், “”என் நாயகரை இனி நான் எவ்வாறு அடையலாம்? அதற்கேற்ற விரதம் ஒன்றினைக் கூறுங்கள்’’ என்று முனிவரிடம் கேட்டாள். கௌதம முனிவர் கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறி, அவ்விரதத்தை அனுஷ்டித்தால் இறைவன் திருவருளைப் பெறலாம் என்று கூறினார்.

    அதன்படி கௌரிதேவி கேதாரம் என்னும் தலத்தில் அந்தக் கரணங்களையும் ஐம்பொறிகளையும் அடக்கி விரதம் இருந்து “”ஐயனே, தங்கள் அடியார்க்கு யான் பேதமையால் செய்த குற்றத்தைப் பொறுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும்‘’ என துதித்தாள். கௌரிதேவியின் பக்தியில் திருப்தியுற்ற இறைவன் தேவியை ஏற்றுத் தன் இடப்பாகத்தில் அமரச் செய்தார். தேவர்கள் கேதார கௌரி விரதத்தின் பெருமையை உணர்ந்து தொடர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தனர்.

    பார்வதிதேவி இவ்விரதத்தை அனுஷ்டித்து இறைவன் அருளால் இறைவனது இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதால், கணவன்- மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழவேண்டும் என்பதையே இவ்விரதம் உணர்த்தும் தத்துவமாகக் கொள்ளலாம். “கேதார கௌரி விரதத்தை மேற்கொள் பவர்கள் விருப்பங்களை நிறைவேற்றி அருள்பாலிக்க வேண்டும்‘ என்று தேவி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவ்வாறே வரமருளினார். அதன்படியே இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் விருப்பங்கள் நிறைவேறி நலம்பெறுவர்.

    சித்தி விநாயக விரதம் :

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.

    சஷ்டி - லலிதா விரதம் :

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

    அமுக்தாபரண விரதம் :

    புரட்டாசி வளர்பிறை சப்தமியில, உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க, அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சவுபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    ஜேஷ்டா விரதம் :

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பிடிக்காதே’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

    தூர்வாஷ்டமி விரதம் :

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம்புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

    மகாலட்சுமி விரதம் :

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம்பெறும்.

    கபிலா சஷ்டி விரதம் :

    புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. சித்திகளைத் தரும்.
    ஆனி ஏகாதசியன்று முழுமையாக விரமிருந்தவர்கள் இழந்தைகளை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
    பாண்டவர்களுள் ஒருவனாக விளங்கிய பீமன், சாப்பாட்டில் பிரியம் கொண்டவன். அவன் தனக்கு அருள் கிடைக்க வேண்டி ஏகாதசி விரதமிருக்க முடிவெடுத்தான். ஆனால், அவனால் பட்டினியாக இருக்க முடியவில்லை. எனவே, தனக்கு குருவாக விளங்கும் வியாச பகவானிடம் இதைப்பற்றி எடுத்துரைத்தான்.

    ஒரே ஒரு ஏகாதசியில் மட்டும் நான் முழுமையாக உபவாசம் இருக்கிறேன். ஆனால் எனக்கு எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலன் கிடைக்க வேண்டுமென்று சொன்னான். அதற்கு வியாச முனிவர் ‘ஆனி மாதம் சுக்ல படச ஏகாதசியன்று விரதமிருந்தால், உனக்கு முழுமையான பலன் கிடைக்கும்’ என்று அருள்புரிந்தார்.

    அன்று முதல் ஆனிமாத ஏகாதசி ‘பீம ஏகாதசி’ என்று அழைக்கப்பெற்றது. அந்த ஏகாதசியன்று முழுமையாக விரமிருந்தவர்கள் இழந்தைகளை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள்.
    மாதந்தோறும் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்புகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.

    பின்னர் நாரதர் வருகையின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்யச் சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறினார்.

    தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.

    இன்னும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவு கிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.
    ×