தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். ராமேசுவரத்தில் தொடங்கும் இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த பயண திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி எலிசி அரண்மனைக்குச் சென்றார். அதிபர் இம்மானுவல் மேக்ரான் அவரை வரவேற்று விருந்தளித்தார். பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை அதிபர் மேக்ரான் வழங்கி கவுரவித்தார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பாரிசில் இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசிய தினம் கொண்டாடும் பிரான்ஸ் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள ஆழமான நட்புறவின் பிரதிபலிப்பாகும். உலகின் பழமையான மொழி தமிழ் என தெரிவித்தார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. 2வது நாளான இன்று இந்திய அணியின் அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி நாடாரின் வெற்றி செல்லாது என அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கையாக தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கம் வென்றார். அப்துல்லா அபூபக்கர், ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றார்.
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அதற்காக சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
இந்திய சட்ட ஆணைய தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.