என் மலர்
புதுச்சேரி

பாராளுமன்ற தேர்தலில் போட்டியா? - தமிழிசை பதில்
- கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன்.
- தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நாகாலாந்து உதயநாள் விழா நடந்தது.
கவர்னர் தமிழிசை தலைமையில் நடந்த விழாவில் புதுவை பல்கலைக்கழகம், ஜிப்மரில் படிக்கும் நாகாலாந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களோடு இணைந்து கவர்னர் தமிழிசை நடனமாடினார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரும், முதலமைச்சரும் அமர்ந்து பேசினால் பல தீர்வுகள் கிடைக்கும் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த கருத்தை உச்சநீதிமன்றம் தற்போது பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் தொகுதியில் நடக்கும் விழாவில் அவர்களை அழைக்க வேண்டும் என கூறுகின்றனர்.
அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை என அரசியல் செய்யக்கூடாது. நிகழ்ச்சிக்கு அழைக்காத கலெக்டரிடம் கேள்வி கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?
கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுவையை என் குழந்தையாக பார்த்து பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நான் புதுவையிலேயே உள்ளேன் என கூறுகிறார். அந்தளவுக்கு புதுவையின் மீது கவனம் செலுத்துகிறேன்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன். தற்போது கவர்னராக இருப்பதால் அதுகுறித்து பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்சாகவே இருக்கட்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.






