என் மலர்
புதுச்சேரி

கொலை செய்யப்பட்ட மணிமாறன்.
பிரபல ரவுடி வெட்டிக்கொலை: பிறந்த நாளில் தீர்த்து கட்டிய கொடூரம்
- ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
- வழக்குபதிவு செய்து மணிமாறனை கொலை செய்து கும்பலை தேடி வருகிறார்கள்.
மதகடிப்பட்டு:
புதுவை முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மணிமாறன் என்ற டூம் மணி (வயது35). பிரபல ரவுடியான இவர் மீது முத்தியால்பேட்டையை சேர்ந்த அன்பு ரஜினி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே அன்பு ரஜினி கொலைக்கு பழிக்கு பழியாக மணி மாறனை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது.
இதனையறிந்த மணிமாறன் அந்த கும்பலுக்கு பயந்து கடந்த சில மாதங்களாக மடுகரை பகுதியில் உள்ள தனது நண்பரின் அண்ணன் ராம்ஜி என்பவர் வீட்டில் தங்கியிருந்து வந்தார். மேலும் அங்கிருந்த படியே கரும்பு வெட்டும் வேலைக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை மணிமாறன் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள தோப்பு பகுதிக்கு சென்று பின்னர் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.
மடுகரை தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது திடீரென காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி திபுதிபுவென கத்தி, வீச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கினர்.
இதனை கண்ட மணிமாறன் தன்னை கொலை செய்ய கும்பல் வந்திருப்பதை அறிந்து அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் மணிமாறனை பின் தொடர்ந்து விரட்டி சென்றது.
உயிர் பிழைக்க மணிமாறன் அங்குள்ள ஒரு வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட அந்த கும்பல் மணிமாறனை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியது.
இதில் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் மணிமாறன் துடிதுடித்து இறந்தார். இதன் பின்னர் அந்த கும்பல் காரில் தப்பி சென்றுவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மடுகரை மற்றும் நெட்டப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து மணிமாறனை கொலை செய்து கும்பலை தேடி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட மணிமாறனுக்கு இன்று பிறந்த நாளாகும். அவர் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தார். அங்குள்ள நண்பர்களிடம் இதனை அவர் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை மணிமாறனை காரில் வந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு சென்றது. பிறந்த நாளிலே அவரை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






