search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போதைப்பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது: கஞ்சா நகரமாக மாறியுள்ள புதுச்சேரி- நாராயணசாமி
    X

    போதைப்பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது: கஞ்சா நகரமாக மாறியுள்ள புதுச்சேரி- நாராயணசாமி

    • என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
    • குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.

    100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

    உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.

    புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.

    குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.

    சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.

    புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.

    சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.

    Next Story
    ×