என் மலர்tooltip icon

    வழிபாடு

    அக்னிச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக வந்த பக்தர்கள்.
    X
    அக்னிச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

    தண்டுமாரியம்மன் கோவில் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

    கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி ஊர்வலம் இன்று காலை நடந்தது. அக்னிச் சட்டிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை கோனியம்மன் கோவில் முன்பு திரண்டனர்.
    கோவை அவினாசி சாலையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியும், 21-ந் தேதி அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. அக்னிச்சாட்டு கம்பத்துக்கு பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர்.

    22, 25-ந் தேதிகளில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மேலும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி ஊர்வலம் இன்று காலை நடந்தது. பல்வேறு இடங்களில் அக்னிச் சட்டிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை கோனியம்மன் கோவில் முன்பு திரண்டனர்.

    அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. சக்தி கரகம் முன் செல்ல அதனை தொடர்ந்து வேண்டு தலுக்காக அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள் பின் தொடர்ந்து நீண்ட வரிசையில் வந்தனர். அவர்களுடன் பால்குடம் எடுத்த பக்தர்களும் ஊர்வலமாக வந்தனர்.

    ஊர்வலம் ஒப்பணக்கார வீதி, பால்மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக் பாண்ட் ரோடு, அவினாசி ரோடு வழியாக தண்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு அக்னிச்சட்டியை இறக்கி வைத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் காப்பு கயிறை கழற்றி விரதம் முடித்தனர்.

    விழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    நாளை (28-ந் தேதி) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், 11 மணிக்கு மஞ்சள் நீர் நிகழ்வும் நடக்கிறது. மாலை 7 மணிக்கு கொடியிறக்குதல், கம்பம் கலைதல் நிகழ்ச்சி நடக்கிறது. 1-ந் தேதி மாலை 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×