search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்த காட்சி.
    X
    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்த காட்சி.

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா நடந்தது. ‘அரோகரா... அரோகரா...’, பக்தி கோஷத்துடன் பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
    சென்னையில் உள்ள தொன்மை வாய்ந்த வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவையொட்டி வடபழனி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கோவிலை சென்றடையும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்காக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    காலை 9.50 மணியளவில், வடபழனி முருகன் கோவிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் வள்ளி-தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளினார். தேரை பக்தர்களே வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...’ என்று பக்தி கோஷம் எழுப்பி மனமுருக வழிபட்டனர்.

    கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி தேர் பவனி வந்தது. பின்னர் வடபழனி கோவில் அருகே உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேர் சென்ற வழியெல்லாம் பக்தர்களும் உடன் சென்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் உடன் சென்றனர். தேருக்கு முன்பாக வழிகாட்டும் நாயகனாக விநாயகர் சிலையும், தேருக்கு பின்னால் கோவில் பாதுகாவலரான சண்டிகேஸ்வரர் சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    தேரோட்டம் முடிந்த பிறகு, நேற்று மாலை கோவில் வளாகத்திலேயே ஒய்யாளி உற்சவம் நடத்தப்பட்டது. தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த களைப்பில் அசதி கொண்ட முருகன், நாதஸ்வர இசைக்கு ஏற்ப ஆடி தனது களைப்பை போக்கிக்கொள்ளும் நிகழ்வாக ‘ஒய்யாளி உற்சவம்’ கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கோவில் வளாகத்திலேயே முருகனை ஆடிப்பாடி உலா வர செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இந்த நாட்களில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பரதநாட்டியமும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ல.ஆதிமூலம், உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×