search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுந்தரபாண்டியன் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றியதை படத்தில் காணலாம்.
    X
    சுந்தரபாண்டியன் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றியதை படத்தில் காணலாம்.

    திருவானைக்காவல் கோவில் 7 கோபுரங்கள், மூலவர் சன்னதிகளுக்கு இன்று 2-ம் கட்ட கும்பாபிஷேகம்

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் 7 கோபுரங்கள், மூலவர் சன்னதிகளுக்கு இன்று 2-ம் கட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் போற்றப்படுகிறது. மேலும் சைவத்திருத்தலங்களில் முக்கியமான திருத்தலம் இதுவாகும்.

    இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையடுத்து 2 கட்டமாக கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் கட்ட கும்பாபிஷேகம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் பரிவார தெய்வங்கள் மற்றும் உபசன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பெரிய கோபுரங்கள், மூலவர், அம்பாள் சன்னதி மற்றும் விமானங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுந்தர பாண்டியன் கோபுரம் அருகே உள்ள யாகசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். அப்போது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

    மூலவர் ஜம்புகேஸ்வரர் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.

    பின்னர் 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் ராசாமணி, திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் தம்பிரான் சுவாமிகள், தர்மாபுரம் ஆதீனம் மாசிலாமணி சுவாமிகள், வேளாங்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகா தேசிக சுவாமிகள்,

    புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திரு வானைக்காவல் கோவில் தக்கார் ராணி, நிர்வாக அதிகாரியும், உதவி ஆணையருமான ஜெயப்பிரியா, ரெங்கவிலால் ரெங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள்.

    அப்போது பக்தர்கள் வல்ல சிவனே போற்றி, சிவ சிவ போற்றி என பக்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    முன்னதாக நேற்றிரவு திருவானைக்காவல் கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். யாகசாலை மண்டபத்துக்கு வந்த அவருக்கு மேள, தாளம் முழங்க பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    அதன் பிறகு யாகசாலை பூஜையில் கவர்னர் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும், கவர்னருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி திருவானைக்காவல் கோவிலில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×