search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்
    X

    மகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்

    மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த புஷ்கர விழா 144 ஆண்டுக்கு ஒருமுறை வந்துள்ளதால் மகா புஷ்கரமாகும்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீர்த்தக்கட்டங்களில் ஆன்மீக அமைப்புகள் சார்பாக சிறப்பு வேள்விகள் நடைபெற்றன. மாலையில் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. மாலையில் பஞ்சபூத மேடையில் 16 வகையான தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆராத்தி நடத்தப்படுகிறது.

    அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் கைவல்ய நவநீத சிறப்பு மாநாடு நடைபெற்றது.



    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை துர்கா ஹோமம் நடந்தது. நெல்லை குறுக்குத்துறையில் புஷ்கரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் இன்று காலை நிருசிம்ஹ ஹோமம் நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்றும் பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறையில் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு வழிபாடுகள் நடந்தன.

    முறப்பநாடு கைலாசநாதர் கோவில் முன்புள்ள தாமிரபரணிக்கு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் ஆற்றில் நீராடி வழிபட்டார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தில் உடலில் ஏற்பட்டுள்ள சகல வியாதிகளை குணப்படுத்தவும், மனநிம்மதிக்கான ஸ்ரீதன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

    மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி கரையோர கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் கோவில், அம்பை கோவில்கள், சேரன்மகாதேவி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், கரிசூழ்ந்தமங்கலம், நெல்லையப்பர் கோவில், நவ கைலாய கோவில்கள், நவ திருப்பதி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து இடங்களிலும் வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் குவிந்துள்ளார்கள். அவர்கள் சாமி தரிசனம் செய்து சிறிய கேன்களில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.
    Next Story
    ×