search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கும்பாபிஷேகம் - கெடுபிடியால் பக்தர்களின் வருகை குறைந்தது
    X

    திருப்பதி கும்பாபிஷேகம் - கெடுபிடியால் பக்தர்களின் வருகை குறைந்தது

    திருப்பதி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஏழுமலையானுக்கு அஷ்டபந்தனம் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருப்பதி வெறிச்சோடியது. இதனால் உண்டியல் வருமானம் குறைந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16-ந்தேதி காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஹோமங்கள் மற்றும் சிறப்புப்பூஜைகள் நடந்து வருகின்றன. தங்கத் தர்ப்பை ஒன்றை தேவஸ்தானம் உருவாக்கியிருந்தது. அதன் மூலமாக மூலவர் வெங்கடாஜலபதி, பரிவார மூர்த்திகளின் ஜீவசக்தி முழுவதும் 18 கும்பங்களுக்கு மாற்றப்பட்டது. அந்த 18 கும்பங்கள் யாக குண்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வேத விற்பன்னர்கள் சங்கசூரணம், கைரீகம், வெள்ளைகுக்கிலம், லக்கை, வெண்ணெய், திபுலசூரணம், சிவப்பு பஞ்சு, தேனைவைணம் ஆகிய 8 வகையான திரவியங்களால் அஷ்டபந்தன சூரணம் தயார் செய்து, மூலவர் வெங்கடாஜலபதியின் பத்ம பீடத்திலும், கோவிலில் உள்ள அனைத்துப் பரிவார மூர்த்திகளின் பீடத்திலும் வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோவிலில் ராமுலவாரிமேடை பகுதியில் உள்ள கதவுகள் மூடப்பட்டன. கோவிலுக்குள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    கோவில் வளாகத்தில் யாகம் நடக்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்-2 வழியாக காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரையிலும், மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 12 மணிவரையிலும் மொத்தம் 35 ஆயிரத்து 400 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.



    தேவஸ்தானத்தின் தொடர் கெடுபிடியால் திருப்பதிக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைந்தது. இதனால் திருப்பதியில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. அலிபிரி-திருமலை இடையே பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது. தலைமுடி காணிக்கை செலுத்துமிடம், லட்டு பிரசாதம் விநியோக மையம், தரிசன வரிசைகள், தங்கும் அறை வழங்கும் மையங்களிலும் பக்தர்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடுகிறது.

    அன்னதான மையத்தில் மிக குறைவான பக்தர்கள் மட்டுமே இலவச உணவை சாப்பிடுகின்றனர். பக்தர்கள் அதிகம் வராததால் இலைகள் போடப்பட்டு, பக்தர்களுக்காக ஊழியர்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தொடர்ந்து பக்தர்களின் வருகை குறைந்ததால், உண்டியல் வருமானமும் குறைந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக உண்டியல் வருவாய் ரூ.3 கோடி இருக்கும்.

    தற்போது பக்தர்களின் வருகை குறைந்ததால், நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையனின் உண்டியல் வருமானம் ரூ.73 லட்சமாக குறைந்தது. 6,994 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    கும்பாபிஷேகத்திற்காக மூலவர் கருவறையிலும் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படும் தங்க கோபுரத்திலும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இன்றும் நடக்க உள்ளது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால் மராமத்து பணிகளை அர்ச்சகர்கள் மட்டுமே செய்து வருகின்றனர். மேலும் யாகசாலையில் உள்ள கும்பத்திற்கு தொடர்ந்து வேதபண்டிதர்கள் மற்றும் ரூத்விக்குகள் மூலமாகயாகம் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×