search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா - காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்
    X

    மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா - காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.
    பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே ஆடிப்பண்டிகையின் நோக்கம். குறிப்பாக காவிரி கரையில் வசிக்கும் மக்கள் இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சேலம், நாமக்கல், ஈரோடு தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மேட்டூர் அணை முனியப்பன் கோவிலுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்கு வைத்து உணவு சமைத்து அதனை அருகில் உள்ள அணை பூங்காவுக்கு எடுத்து சென்று உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர்.

    மேட்டூரை சுற்றியுள்ள கோவில்களில் உள்ள சாமி சிலைகள், ஈட்டிகள், அரிவாள்களை மேள தாளம் முழங்க எடுத்து வந்த பக்தர்கள் காவிரியில் சுத்தப்படுத்தி மீண்டும் அதனை கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 18 ஆயிரத்து 267 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை காவிரி பாலம் படித்துறை, மட்டம், பாம்பு புற்று படித்துறை, மேற்கு கால்வாய் ஆகிய 4 இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், கரையில் நின்று போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்த பகுதிகளில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    மேட்டூர் அரசு பள்ளி வளாகம், பொன்நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேட்டூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஈரோடு மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மாதையன் குட்டையில் இருந்து மேற்கு மெயின் ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து சென்றன.

    சேலம் மார்க்கமாக வரும் பஸ்கள் துணை கலெக்டர் இல்ல சாலை வழியாக மாதா கோவில் அருகே மேற்கு பிரதான சாலை வழியாக பஸ் நிலையம் வந்து சென்றன. இதே போல மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.

    எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்கள் இன்று காலை முதலே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குவிந்தனர். காவிரியில் புனித நீராடிய சுமங்கலி பெண்கள் பழைய தாலி கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறை அணிந்து கொண்டனர். இதனால் கணவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

    புதுமண தம்பதிகள் காவிரி கரையில் சிறப்பு பூஜை செய்து தங்களின் திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். அந்த பகுதியில் உள்ள உற்சவ மூர்த்தி சிலை மற்றும் கோவிலில் உள்ள பூஜை பொருட்களை மேள தாளங்கள் முழங்க எடுத்து வந்து காவிரி ஆற்றில் சுத்தப்படுத்தி மீண்டும் கோவில்களுக்கு எடுத்து சென்றனர்.

    சேலத்தில் இருந்து பூலாம்பட்டிக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×