என் மலர்tooltip icon

    ஏமன்

    • செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்.
    • கடந்த நவம்பரில் இருந்து 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

    செங்கடலில் செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இந்தியா அரபிக் கடலில் உள்ள தனது எல்லையில் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் செங்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு ஏவுகணைகளை அமெரிக்க போர் கப்பல் வெற்றிகரமாக நடுவானில் தாக்கி அழித்தது.

    பின்னர் 4 படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிங்கப்பூர் கப்பலில் ஏற முயன்றுள்ளனர். இதனால் அமெரிக்க கப்பற்படையின் ஹெலிகாப்டர் அந்த படகுகளை துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதில் மூன்று படகுகளை குறிவைத்து தாக்தி அழித்துள்ளது. ஒரு படகு தப்பிச் சென்று விட்டது. இதில் தங்களது குழுவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான விளைவு குறித்தும் எச்சரித்துள்ளது.

    நவம்பர் 19-ந்தேதியில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல் மீது 23 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக அமெரிக்க கப்பற்படை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குல் நடத்தி கொன்றுள்ளது.

    • செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்- ஹவுதி
    • ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கிடையே செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹவுதி அமைப்பினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் செங்கடலில் பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கப்பல் மீது தாக்கியதில் தீப்பிடித்தது என்றும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலையடுத்து செங்கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர் கப்பலான யு.எஸ்.எஸ். மேசன் அங்கு சென்று உதவியதாக தெரிவித்தனர். ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு கப்பல் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த ஹவுதி அமைப்பினர் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது.
    • ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சனா

    ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.

    இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.

    இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர்.

    இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பை கேட்டதும் அங்குள்ள மக்கள் நிதியுதவி பெறுவதற்காக நிதியுதவி வழங்கும் இடத்தில் திரண்டனர். நேரம், செல்ல, செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் மக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு நிதியுதவியை பெற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி கூறியதாவது:-

    ரம்ஜான் பண்டிகையையொட்டி சிலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை.இதனால், திட்டமிடல் இன்றி பரவலாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற மக்கள் முண்டியடித்ததில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இதில் சிக்கி 85 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்துல் ரஹ்மான் மற்றும் யாஹியா மோசென் கூறும்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் முயற்சியாக துப்பாக்கி ஏந்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வானை நோக்கி சுட்டனர். அப்போது, மேலே மின்கம்பி மீது குண்டுபட்டு வெடித்து உள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் தப்பிக்க நாலாபுறமும் ஓடியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது.
    • கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய தீவான கமரன் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படகில் சென்று கொண்டிருந்தனர்.

    படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேர் இருந்தனர். இந்த படகு ஹொடைடா நகருக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆனால் அதற்குள் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் என 21 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அதே சமயம் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

    அதே சமயம் கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 21 பலியானது ஏமனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏடன் நகரில் அடிக்கடி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • அதேபோல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏமன் நாட்டின் தெற்கு பகுதி நகரமான ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் 4 பொதுமக்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஏடன் நகரில் அடிக்கடி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×