என் மலர்
உலகம்

$130 பில்லியன் பணம் திருப்பி அளிக்கப்படுமா? டிரம்ப் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்
- நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் வரியை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
- கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் வரிகள் விதிக்கப்பட்டன.
அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரி தொடர்பான வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது. நேற்று நீதிமன்றம் மூன்று வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்த போதிலும், டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான முக்கிய வழக்கில் முடிவெடுக்கவில்லை.
மேலும் உச்ச நீதிமன்றம் தற்போது நான்கு வார கால விடுமுறைக்கு செல்வதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அல்லது தீர்ப்பு பிப்ரவரி 20 வரை வெளிவர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற விசாரணையின்போது 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி நாடு தழுவிய அளவில் வரிகளை விதிப்பது அதிபரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்பிற்கு எதிராக அமைந்தால், அவர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு அவர் சந்திக்கும் மிகப்பெரிய சட்டப்பூர்வ தோல்வியாக இது இருக்கும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் (சுமார் ₹10 லட்சம் கோடிக்கும் மேல்) வரியை இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க அரசு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தும் திட்டங்களை எதிர்த்தால் ஐரோப்பிய நாடுகள் மீது மேலும் வரிகளை விதிக்கும் அவரது தற்போதைய அச்சுறுத்தலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள இந்த வழக்கு, ஏப்ரல் 2-ம் தேதி டிரம்ப் அறிவித்த 'விடுதலை நாள்' (Liberation Day) வரிகள் தொடர்பானது. இது பெரும்பாலான இறக்குமதிகள் மீது 10 முதல் 50 சதவீதம் வரை வரி விதித்தது. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் இந்த வரிகள் விதிக்கப்பட்டன.






