என் மலர்
உலகம்

வெனிசுலாவுக்கு இடைக்கால அதிபர் நியமனம்- உச்சநீதிமன்றம் அதிரடி
- வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- வெனிசுலாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெனிசுலாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என சீனா, ரஷியா, பிரேசில், கியூபா உள்ளிட்ட நாடுகளுடன் ஐ.நா. சபையும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்த நிலையில், வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்கை நியமித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும். எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்து பாதுகாப்புப் படைகளையும் நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றார்.






