என் மலர்
உலகம்

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்.. இந்து சிறுவன் கொலை | Bangladesh Hindus
- வாகனம் ஏறி சாந்தோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
- 116 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் பெனி மாவட்டத்தில் ஆட்டோவை திருட முயன்ற கும்பலால் சாந்தோ குமார் சாஹா என்ற இந்து சிறுவன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (மார்ச் 8) டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலையில் உள்ள லால்போல் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சாந்தோ தனது ஆட்டோவில் பயணிகளுக்காகக் காத்திருந்தபோது, ஒரு கும்பல் அவனை தாக்கி ஆட்டோவைப் பறிக்க முயன்றது.
அவர்கள் சாந்தோவை நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் வீசிவிட்டு ஆட்டோவுடன் தப்ப முயன்றனர்.
சாந்தோ எழுந்து அவர்களைத் துரத்தியபோது, ஓடும் வாகனத்தின் அடியில் சாந்தோவை தள்ளிவிட்டனர். இதில் வாகனம் ஏறி சாந்தோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
வங்கதேசத்தில் தற்போது தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அரசு அண்மையில் பதவியேற்றது.
இருப்பினும், சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.
இதற்கு முன்பு முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத இடைக்கால ஆட்சியின் போதும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.
2025 ஜூன் முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் மட்டும் வங்கதேசத்தில் சுமார் 116 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.






