என் மலர்tooltip icon

    உலகம்

    கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து
    X

    கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து

    • அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எல்லையோர மாகாணங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

    கம்போடியா உடனான மோதல் எதிரொலியாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தாய்லாந்து அரசாங்கம் மூடி உள்ளது.

    தாய்லாந்து-கம்போடியா எல்லையான தா முயென் தாம் என்ற இந்து கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த கோவிலுக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.

    இதனால் அடிக்கடி எல்லை பிரச்சினை நிலவுகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதனையடுத்து மலேசியாவில் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கடந்த 7-ந்தேதி இந்த மோதல் மீண்டும் வெடித்தது. இதனால் தாக்குதலை தூண்டியதாக ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    எனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பினரும் பரஸ்பரம் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் உயிருக்கு பயந்து எல்லை பகுதியில் வசித்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் எல்லையோர மாகாணங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

    எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி புரிராம் உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தற்காலிகமாக மூடுமாறு தாய்லாந்து கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×