என் மலர்
உலகம்

Gulf countries | எண்ணெய் கிடங்கு - கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா நாடுகளில் பதற்றம் நீடிப்பு
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் டிரோன்கள் , ஏவுகணைகளை வீசியது
- பக்ரைனில் உள்ள முக்கிய எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
இஸ்ரேல் மற்றும் வளை குடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இன்று அதிகாலை குவைத்தின் வடக்கு பகுதியில் பல டிரோன்களை இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் டிரோன்கள் , ஏவுகணைகளை வீசியது. இதை வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்தன.
இதற்கிடையே துபாயில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. சவுதி அரேபியாவின் ஷாய்பா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட டிரோன்கள் இடைமறிக்கப்பட்டன.
பக்ரைனில் உள்ள முக்கிய எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. முஹாரக் பகுதியில் உள்ள எரி பொருள் தொட்டிகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் எரி பொருள் தொட்டிகள் தீப்பிடித்து எரிகிறது. இதையடுத்து ஹித், ஆராத், கலாலி மற்றும் சமாஹீஜ் ஆகிய நகரங்களில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கவும், ஜன்னல்களை மூடி வைக்கவும் பக்ரைனின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஓமனின் சலாலா துறைமுகத்தில் உள்ள பல எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் டிரோன்கள் மூலம் தாக்கப்பட்டன.
இதில் அந்த எரிபொருள் தொட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதற்கிடையே ஓமனின் சலாலா துறைமுகம் மீதான தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஈரானின் தொடர் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் பதற்றம் நீடித்து வருகிறது.






