search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் ராக்கெட் வீச்சு
    X

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் ராக்கெட் வீச்சு

    • காசா பகுதியில் இதுவரை 21,800 பேர் வரை உயிர் இழந்து விட்டனர்.
    • போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    காசா:

    இஸ்ரேல் ராணுவம்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் தொடங்கி 3 மாதத்தை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. ஹமாசை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இதையடுத்து தற்போது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. காசா முழுவதும் இடைவிடாமல் வான்வெளி வழியாக குண்டுகளை வீசி வருகிறது. பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க பதுங்கு குழிகளை குறிவைத்தும் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இஸ்ரேல் ராணுவத்தின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஏராளமானவர்கள் பலியாகி விட்டனர்.

    காசா பகுதியில் இதுவரை 21,800 பேர் வரை உயிர் இழந்து விட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கடும் சண்டைக்கு மத்தியில் உயிருக்கு பயந்து ஏராளமான பொதுமக்கள் எகிப்தின் ரபா எல்லையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நேற்று புதிதாக வான் வெளி தாக்குதலை நடத்தினர். அந்த பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 35 பேர் பலியாகி விட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சூழ்நிலையில் காசாவில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    இஸ்ரேல் மீது சுமார் 20 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை.

    மேலும் வடக்கு இஸ்ரேல் நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ஏவிய 2 டிரோன்களை இஸ்ரேல் படை சுட்டு வீழ்த்தியது. இதனால் தற்போது போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சண்டை தீவிரமடைந்து இருப்பதால் ஹமாசுக்கு எதிரான போர் முடிவுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×