என் மலர்
இலங்கை
- அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயன்றார்.
கொழும்பு:
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றார்.
அதன் பிறகும் இலங்கையில் பொருளாதார நெருக் கடிக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடந்தன.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது.
இதற்கிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில் சபாநாயகர் அபேவர்த்தனா தலைமையில் பாராளுமன்ற அனைத்து கட்சிகளின் அவசர கூட்டம் நடந்தது. அதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.
கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டம் நடத்தினார்கள். அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை பயன்படுத்தினார்கள். நீச்சல் குளத்தில் குளித்தனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பயன்படுத்திய படுக்கையிலும் தூங்கினர்.
போராட்டக்காரர்கள் தனது மாளிகைக்குள் நுழையும் முன்பே அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் தற்போது ராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயன்றார். இவர் மகிந்த ராஜபக்சேவின் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
இவர் ராஜபக்சே குடும்பத்தில் உள்ள கடைசி தம்பி ஆவார். பொதுமக்கள் போராட்டம் வெடித்ததும் முதல் முதலில் இவர்தான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இவர் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் தப்பி செல்ல திட்டமிட்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் முக கவசம் அணிந்து இருந்ததால் பெரும்பாலான பயணிகளுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. ஆனால் அதே வேளையில் விமான நிலைய அதிகாரிகளும், அங்கிருந்த போராட்டக்காரர்களும் பசில் ராஜபக்சே தப்பி செல்வதை கண்டுபிடித்தனர்.
பசில் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளிலும் குடியுரிமை உள்ளது. எனவே அவர் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே போராட்டக்காரர்களும் பொதுமக்களும் பசில் ராஜபக்சேவை தடுத்து நிறுத்தினார்கள். விமான நிலைய அதிகாரிகளும் அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் விமானத்தில் தப்பி சென்றால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்தனர்.
இதனால் இரவு 12.15 மணிக்கு விமான நிலையத்துக்கு சென்ற பசில் ராஜபக்சே அதிகாலை 3.15 மணி வரை அங்கேயே இருந்தார்.
மேலும் விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறையில் அவருக்கு சேவை செய்யவும் ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக அரசு தொடர்புடைய முக்கிய பிரமுகர்களை நாட்டை விட்டை வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று குடியுரிமை அதிகாரிகளுக்கு நெருக்கடி இருப்பதால் அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை என்று அதன் சங்க தலைவர் கே.ஏ.எஸ். கணு கலே தெரிவித்தார்.
ராஜபக்சே குடும்பத்தினர் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக போராட்டக்காரர்கள் கொழும்பில் இருந்து விமான நிலையம் வரை சோதனை சாவடி அமைத்துள்ளனர். அந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த கண்காணிப்பையும் மீறி பசில் ராஜபக்சே கொழும்பு சர்வதேச விமான நிலையம் வரை சென்று விட்டார்.
பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அவரை கண்டுபிடித்ததாலும், அதிகாரிகள் அவரை வெளிநாடு செல்ல அனு மதிக்காததாலும் பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.
- பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது.
- இலங்கையில் ஒரு சாதாரண சைக்கிள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார்கள்.
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. 1 லிட்டர் பெட்ரோல் ரூ.450-க்கு மேல் விற்கப்படுகிறது. அதுவும் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்து கிடந்தாலும் பெட்ரோல் கிடைப்பதில்லை.
எனவே இலங்கையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் ஏராளமானோர் சைக்கிள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இதனால் சைக்கிள் கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ள சைக்கிள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சைக்கிள்களின் விலை எகிறியது.
இலங்கையில் ஒரு சாதாரண சைக்கிள் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. பலர் அதடினயும் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். தற்போது சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் தேவை அதிகரித்துள்ளது.
நடுத்தர மக்களால் ரூ.50 ஆயிரம் விலை கொடுத்து சைக்கிள் வாங்க முடியாது என்பதால் அவர்கள் தங்களது வீடுகளில் கிடக்கும் பழைய சைக்கிள்களை தூசி தட்டி எடுத்து பழுது பார்த்து பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
- ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்திருந்தனர்.
- ஜூலை 13-ம் தேதி குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்தார். அதில் அவர், "ஏற்கனவே அறிவித்த படி ஜூலை 13-ந்தேதி பதவியில் இருந்து விலகுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறினாலும் கொழும்பில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். 13-ந்தேதி வரை நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்திருந்தனர்.
இந்நிலையில், பதவி விலகல் கடிதத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 13-ம் தேதி குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர்.
- போராட்டக்காரர்கள் பலர் தற்போது அதிபர் மாளிகையிலேயே தங்கியுள்ளனர்.
கொழும்பு :
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர்.
அங்குள்ள குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் அவர்கள் குளித்து மகிழ்ந்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் நேற்று வேகமாக பரவியது. இந்த நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள தொலைக்காட்சியில் தங்கள் சொந்த ஆர்ப்பாட்டத்தை பார்க்கும் மற்றொரு படம் இணையத்தில் வெளிவந்துள்ளது.
அந்த புகைப்படத்தில் தொலைக்காட்சிக்கு முன்பு தரையில் படுத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் நேரடி செய்திகளை பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதனை அங்குள்ள ஒருவர் தனது மொபைல் போனில் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
- தற்போது வரை போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே உள்ளனர்.
கொழும்பு :
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். தற்போது வரை போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே உள்ளனர்.
கோத்தபயா தப்பியோடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தினர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலானது. இதேபோன்று, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும், மதிய உணவு உண்பது உள்ளிட்ட வீடியோக்களும் வெளிவந்தன.
இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், கழிவு பொருட்கள் ஆகியவை மலைபோல் திரண்டன. அவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஒன்றாக சேர்ந்து, திரட்டி மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறும்போது, கழிவு பொருட்களை தூய்மை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் இது ஒரு பொது இடம். இலங்கையில் உள்ள நடைமுறையை எங்களுடைய தலைமுறை மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி நாங்கள் ஒரு செய்தியை அவருக்கு தெரிவித்து விட்டோம். இதன்பின் நாங்கள் தற்போது அமைதியாக இருக்க வேண்டிய தருணமிது என அவர் கூறியுள்ளார்.
- இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.
- ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு நடைபெறுகிறது.
கொழும்பு:
இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகிய நிலையில், தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து புதிய அதிபர் தேர்வு தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுவதாகவும், புதிய அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூலை 19ஆம் தேதி பெறப்படும் என்றும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை முக்கிய எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயாவின் தலைவர் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சமகி ஜன பலவேகயா கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் தேர்வு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற சஜித் பிரேமதாசவுக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
இதனிடையே, தாய்நாட்டை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது, வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை தவிர மாற்றுத் தீர்வு எதுவும் இல்லை என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அதிபரின் கீழ் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது.
- பொதுமக்கள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு:
கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்கவேண்டும் என முடிவெடுத்தது. பிரதமர் பதவி ஏற்று 2 மாதம் முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் எனவும், புதன்கிழமைக்குள் அவர் இலங்கை திரும்பி விடுவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் அதிபர் கோத்தபய இலங்கையில் தான் உள்ளார். வெளிநாட்டில் இருக்கிறார் என வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
- அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
- கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கொழும்பு:
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள்.
மக்கள் போராட்டம் எழுச்சியாக மாறியதால் கடந்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பு ஏற்றார். என்றாலும் பொருளாதார குழப்பத்தை சீர்படுத்த முடியவில்லை.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று முன்தினம் கொழும்பில் லட்சக்கணக்கில் திரண்டனர். அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்து கைப்பற்றினார்கள். ஜனாதிபதி அலுவலகமும் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மக்கள் கொலை வெறியுடன் திரண்டு வந்ததால் உயிர் பிழைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்களாவை காலி செய்து விட்டு தப்பி ஓடினார். அவர் வெளிநாட்டுக்கு ஓடி இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், "ஏற்கனவே அறிவித்த படி ஜூலை 13-ந்தேதி பதவியில் இருந்து விலகுவேன்" என்று தெரிவித்து உள்ளார்.
பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறினாலும் கொழும்பில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். 13-ந்தேதி வரை நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்துள்ளனர்.
கொழும்பு காலி முகதிடலில் இன்று காலை நிருபர்களை சந்தித்தபோது அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டனர். ஜனாதிபதிக்கு பதில் பிரதமர் ஆட்சி அதிகாரத்தை செய்ய வேண்டும் என்று விதி இருந்தாலும் அதை அனுமதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
மேலும் ரணில் விக்கிரமசிங்கேவும் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகிய பிறகு அனைத்து கட்சிகளை யும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதிய ஆட்சியை உருவாக்க சிலர் நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.
இது தவிர இலங்கையில் அமைய உள்ள இடைக்கால அரசாங்கம் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதற்கு மாறாக சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் முயற்சி செய்தால் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.
அனைத்து கட்சிகள் கொண்ட ஆட்சி அமைந்தால் அது இன்னொரு ஊழலுக்கு வழிவகுத்து விடும் என்றும் அதற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்த தோடு புதிய ஆட்சி தொடர்பாகவும் நிபந்தனைகள் விதிப்பதால் இலங்கையில் மாற்று அரசு அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. புதிய அரசு எப்போது எப்படி அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே கொழும்பில் இல்லாததால் அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாக பொதுமக்கள் அதிபர் மாளிகையில் தங்கியிருந்து பொழுதை போக்கினார்கள்.
- பொதுமக்கள் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது.
கொழும்பு :
விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் வெற்றிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கொண்டாடிய இலங்கை சிங்கள மக்கள், இப்போது நாட்டின் நிலவுகிற வாழ்வாதார நெருக்கடிக்கு அதே ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கூறி போர்க்கொடி உயர்த்தி இருப்பது வரலாற்று திருப்பமாக மாறி இருக்கிறது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் ஒட்டிக்கொண்டிருந்தது, அவரது குடும்பத்தை நெருப்பாற்றில் தள்ளி விடும், மக்கள் போராட்டம் உச்சம் தொடும் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்தபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலிலும், ராணுவத்தினரின் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றிலும் 102 பேர் படுகாயம் அடைந்து கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக்கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேயும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து, பிரதமர் பதவி ஏற்று 2 மாதங்கள் கூட முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரம சிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் (13-ந் தேதி) ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியை கோத்தபய புதன்கிழமை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய முழு கடையடைப்பில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் நேற்று கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் மாளிகைக்கு போராட்டக்காரர்களில் சிலர் தீ வைத்ததில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வீடியோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டது. அந்த வீடியோ பதிவு, ரணில் விக்ரம சிங்கேயின் மாளிகை எரிந்த காட்சிகளையும், சேதம் அடைந்த செடான் கார், ஓவியங்கள், கலைப்படைப்புகள் மாளிகை மற்றும் அதன் வளாகத்தில் சிதறிக்கிடந்ததையும் காட்டின.
பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 3 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேலும் பலர் கைதாவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதமர் மாளிகை தீ வைக்கப்பட்டிருந்தபோது அந்த பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அதுபற்றி விசாரணை நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கு அல்லாடுகின்ற சூழ்நிலையில், அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போராட்டக்காரர்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பணத்தை அவர்கள் கைப்பற்றினர். மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் சிக்கியதாகவும், அந்த பணத்தை உள்ளூர் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று 2-வது நாளாக அதிபர் மாளிகைக்கு மக்கள் அலை, அலையாக வந்து, ஆர்ப்பரித்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாதவரையில், அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறப்போவதில்லை என்பதில் போராடும் மக்கள் உறுதியுடன் உள்ளனர். இதுபற்றி மாணவர் தலைவர் லகிரு வீரசேகர கூறும்போது, "எங்கள் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகிச்செல்கிறவரையில் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்" என தெரிவித்தார். பொதுமக்கள் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இலங்கையின் முதலீட்டுத்துறை மந்திரி தம்மிகா பெரைரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் அவர் பதவி விலகி உள்ளார். இதேபோன்றுஇந்தியா அனுப்பிய யூரியா உரத்தை ஏற்றுக்கொண்ட சிறிது நேரத்தில் விவசாய மந்திரி மகிந்த அமரவீரா பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்காரா, பந்துல குணவர்த்தனே ஆகிய 3 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி விலகினர்.
இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது. இந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ராணுவம் நேற்று கேட்டுக்கொண்டுள்ளது. இதையொட்டி ராணுவ தளபதி சவேந்திர சில்வா வெளியிட்ட அறிக்கையில், "தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகி உள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து இலங்கை மக்களும் ஆயுதப்படைகள் மற்றும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எங்கே ஓட்டம் பிடித்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. அவர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தனி விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொரு தகவல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பல்களில் கடற்படை பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தது.
ஆனால் இப்போது அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் 'லிப்ட்' மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பதுங்கு குழியை அதிபர் மாளிகை சிறப்பு பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர். எனவே இந்த பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.
- ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
- புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையில், அனைத்துக்கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையுடன்அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் பலவீனமான இந்த தருணத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார். அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.
- அதிபர், பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
- இலங்கை நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக, வெளியிறவுத்துறை அமைச்சகம் தகவல்.
கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் நேற்று இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி உள்ள போராட்டக்காரர்கள் குளியல் அறைகளிலும், நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர்.
இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையிலும் அவரது விட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
இலங்கையில் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்தியா ராணுவத்தை அனுப்ப உள்ளதாக சமூக வலைதங்களில் வெளியான தகவல்களை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது போன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று இந்திய தூதரக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கை பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
- இதையடுத்து, முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். அதிபர் கோத்தபயா வீட்டில் நுழைந்த அவர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே தனது பதவியை வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்வார் என பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
அனைத்துக் கட்சிகள் இணைந்து கூட்டாட்சி அரசை அமைக்க வழிவகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.






