என் மலர்
உலகம்

அமெரிக்காவில் சோகம்: தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி பலி
- சஹாஜா தங்கியிருந்த வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் சஹாஜா உள்பட சக மாணவிகள் பலர் சிக்கினர்.
வாஷிங்டன்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியைச் சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில், சஹாஜா தங்கி இருந்த வீட்டில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சஹாஜா உள்பட சக மாணவிகள் சிக்கினர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் வீட்டில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.
இந்த தீ விபத்தில் சஹாஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. சக மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சஹாஜாவுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சஹாஜா நேற்று உயிரிழந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சி எடுத்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






