என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன.

    இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து இன்று கத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் ப்ரோக்ஸ்டெட் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியபோது மர்ம நபர் தாக்குதல் நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக, ஹம்பர்க்-கீல் இடையிலான வழித்தடத்தில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

    • உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவை ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
    • உக்ரைன் வீரர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்படும் என ஜெர்மனி ராணுவ மந்திரி அறிவித்தார்.

    பெர்லின்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரில் அமெரிக்காவும், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, ஜெர்மனி ராணுவ பெண் மந்திரியான கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் ஹெல்மெட்டுகளை வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிநவீன ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் வீரர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் ஜெர்மனி ராணுவ மந்திரியின் இந்த அறிவிப்பு கேலிக்குள்ளானது. சமூக வலைத்தளங்களில் பலரும் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட்டை கேலி செய்து பதிவுகளை வெளியிட்டனர்.

    இந்த சர்ச்சை அடங்குவதற்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் தனது மகனை ராணுவ ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றது விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, ஜெர்மனியின் ஆயுத படைகளை மேம்படுத்த தவறிவிட்டதாக கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    இந்நிலையில், கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் ராணுவ மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஒலாப் ஸ்கோல்சிடம் வழங்கியதாகவும், அவர் அதை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    • நாஜி வதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
    • தண்டனை பெற்ற பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூட்ங்களாக செயல்பட்டன. நாஜி கான்சன்ட்ரேசன் கேம்ப் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

    இந்த நாஜி வதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வதைக்கூடங்களில் பணியாற்றி கைதிகளின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், நாஜி வதைக்கூடத்தில் 10500 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 97 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். நாஜி வதை முகாமில் செயலாளராக பணியாற்றிய இம்கார்டு பர்ச்னர் என்ற அந்த மூதாட்டி, 11,412 பேரின் கொலைகளுக்கு உதவியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இறுதி விசாரணையில் 10500 பேரின் கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை வழங்கி இட்ஸேஹோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றங்கள் நடந்தபோது அவரது வயது 18 வயது என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார். இந்த வதை முகாமில் சுமார் 65,000 பேர் பட்டினி மற்றும் நோயினால் இறந்தனர். அவர்களில் போர்க் கைதிகள் மற்றும் நாஜிகளின் அழிப்பு பிரச்சாரத்தில் சிக்கிய யூதர்களும் அடங்குவர்.

    • ‘அக்வாடோம்' என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக ஓட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் 'ராடிசன் புளூ' என்கிற பிரபல நட்சத்திர ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் மையப்பகுதியில் 52 அடி உயரம் கொண்ட கண்ணாடியால் ஆன ராட்சத மீன் தொட்டி இருந்தது. இது உலகின் மிகப்பெரிய நிற்கும் உருளைவடிவிலான மீன் தொட்டியாக அறியப்பட்டது.

    'அக்வாடோம்' என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை இந்த ராட்சத மீன் தொட்டி உடைந்து, சிதறியது. அதை தொடர்ந்து தொட்டியில் இருந்து வெளியேற தண்ணீர் ஓட்டலுக்கு வெளியே வந்து சாலையில் ஆறாக ஓடியது.

    தொட்டியில் இருந்த நூற்றுக்கணக்கான அரியவகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து செத்தன. மின்தொட்டி உடைந்து கண்ணாடிகள் சிதறியதில் 2 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக ஓட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியிலும் தரையில் கிடந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த டஜன் கணக்கான மீன்களை மீட்டனர். அவை பல்வேறு மீன் தொட்டிகளில் விடப்பட்டன.

    1,500 மீன்களில் எத்தனை மீன்கள் செத்தன, எத்தனை மீன்கள் காப்பாற்றப்பட்டன என தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் பெரும்பாலான மீன்கள் இறந்துவிட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் கூறினார்.

    ஓட்டலுக்குள் வெப்பநிலை, மைனஸ் 6 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் மீன் தொட்டியின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

    • ஜெர்மனி வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
    • பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை தருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் தெரிவித்தார். இதுதொடர்பாக அன்னாலெனா பேர்பாக் கூறியதாவது:

    ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வருகை தருகிறேன்.

    ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவுள்ளது.

    இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.

    வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது.

    உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி. இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது என தெரிவித்தார்.

    • ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா.
    • லுப்தான்சா ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.

    பெர்லின் :

    ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா. உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.

    இந்த நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லுப்தான்சா நிறுவனம் 1,000-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

    இதன்காரணமாக சுமார் 1,34,000 பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற அல்லது முழுவதுமாக ரத்து செய்ய வேண்டியிருந்தது.

    • உங்கள் தட்டில் பாம்பு இருப்பதை கண்டால் உங்களின் கதி என்னவாகும்.
    • இந்த சம்பவம் ஜெர்மனி செல்லும் விமானத்தில் நிகழ்ந்துள்ளது.

    பெர்லின் :

    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி இருக்கையில் விமானத்தில் உணவு உண்ணும் போது உங்கள் தட்டில் பாம்பு இருப்பதை கண்டால் உங்களின் கதி என்னவாகும். அப்படி ஒரு சம்பவம்தான் ஜெர்மனி செல்லும் விமானத்தில் நிகழ்ந்துள்ளது.

    துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டஸ்சல்டார்வ் நகரை நோக்கி சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது விமான பணிப்பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    அவர்களில் ஒரு விமான பணிப்பெண் தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட தொடங்கிய சில நிமிடங்களில் உணவில் காய்கறிகளுக்கு நடுவே பாம்பின் தலை கிடந்ததை கண்டு அதிர்ந்துபோனார். உடனடியாக அவர் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தார்.

    இதனால் சிறிது நேரத்திலேயே இந்த விவகாரம் பூதாகரமானது. அதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

    • பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் கருத்து.
    • ஐரோப்பிய ஒன்றியத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு.

    எல்மா:

    ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மா பகுதியில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களை தனித் தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகவும், இத்தாலி பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமது டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார். மேலும் செனகல் அதிபர் மேக்கி சால், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனைச் சந்தித்து பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றில் இந்தியா-ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆக்கப்பூர்வ முறையில் விவாதம் நடத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    • பிரதமர் மோடியை தேடிச் சென்று அமெரிக்க அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்தார்.
    • மோடி, பைடன் திடீர் சந்திப்பு குறித்த வீடியோ சர்வதேச சமூகத்தினரை வியப்பில் ஆழ்த்தியது.

    முனீச்:

    ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து, புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அனைத்து தலைவர்களும் அப்போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    பிரதமர் மோடி தனது அருகில் நின்று கொண்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை தேடி, அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றார்.

    மோடியின் பின்பக்கத்திலிருந்து தோளை தட்டி அழைத்த பைடன், தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பைடனை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்ற பிரதமர் அவருடன் கைகுலுக்கி பதிலுக்கு வாழ்த்து கூறினார்.

    இந்திய பிரதமர் இருக்கும் இடத்தை தேடிச் சென்று, அமெரிக்க அதிபர் வாழ்த்தியது, சர்வதேச சமூகத்தினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.

    • ஜி7 மாநாடு ஜெர்மனியில் நேற்று தொடங்கியது.
    • இதில் பங்கேற்ற பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்தித்தார்.

    பெர்லின்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

    இதற்கிடையே, ஜி-7 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.

    மேலும், மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரும் பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.

    இதையடுத்து, உலக தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.
    • ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    பெர்லின்:

    அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.

    மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. அதில் உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • ஜெர்மனி சென்றுள்ள பிரதமர், அர்ஜென்டினா அதிபரை சந்தித்தார்.
    • இந்தியாவுடன் யோகா, தியானம், உள்பட கலாச்சார தொடர்பை அர்ஜென்டினா மேற்கொண்டுள்ளது.

    முனீச்:

    ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி,  முனீச் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, விவசாயம், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். 

    இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள், அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

    இந்தியாவில் அர்ஜென்டினாவின் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இரு நாடுகளும் யோகா, தியானம், ஆகியவற்றுடன் கலாச்சார தொடர்பைக் கொண்டுள்ளன.

    அர்ஜென்டினாவில் இந்திய தத்துவம், ஆன்மீகம், நடனம் மற்றும் இசை ஆகியவை பிரபலமாக உள்ளன. அர்ஜென்டினாவில் சுமார் 2,600 வெளிநாடு வாழ் இந்தியர்களும் மற்றும் இந்திய வம்சாவளியினரும் வசிக்கின்றனர்.

    ×