என் மலர்tooltip icon

    உலகம்

    வங்கதேசத்தில் இன்று பொதுத் தேர்தல்: களத்தில் 1,981 வேட்பாளர்கள்
    X

    வங்கதேசத்தில் இன்று பொதுத் தேர்தல்: களத்தில் 1,981 வேட்பாளர்கள்

    • ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தலுக்காக நாடு முழுவதும் 43,000 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12-ம் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. 350 இடங்களைக் கொண்ட வங்கதேச பாராளுமன்றத்தில் 300 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளன.

    இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்கதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

    தேர்தலில் 1,981 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

    இன்று காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×