என் மலர்
உலகம்

ஜூலை சாசனம் வாக்கெடுப்பு: ஒருமித்த கருத்துக்கு வாருங்கள்- அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்ட வங்கதேச அரசு
- வங்கதேச அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இது தொடர்பான வரைவில் கையெழுத்திட அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் மாதம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்துகளுடன் வங்கதேசத்தின் அரசியலமைப்பு, வாக்குமறை, நிர்வாகம் ஆகியவற்றில் பல திருத்தங்கள் கொண்டுவர முடிவு செய்தது.
இது தொடர்பாக இடைக்கால அரசு ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கியது. அதில் கையெழுத்திட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆவணங்களில் கையெழுத்திட கடந்த மாதம் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சீரமைப்பு செயல்படுத்தும் செயல்பாட்டில் வேறுபாடுகள் வெளிபட்டன. முக்கிய கட்சிகள் வாக்கெடுப்பை தேர்தல் நாளில் அல்லது அதற்கு முன்னதாக நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தது. சில கட்சிகள் நவம்பர் மாதம் (இந்தமாதம்) நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.
இதனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒரு வாரத்திற்குள் ஒருமித்த கருத்துக்கு வாருங்கள் என அனைத்து கட்சிகளையும் இடைக்கால அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையென்றால், அரசு தனது சொந்த முடிவை எடுக்கும் என அறிவித்துள்ளது.






