search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா போன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து வளங்களையும் பயன்படுத்த ஜி-7 தலைவர்கள் உறுதி

    கொரோனா தொற்றால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வைரசை எதிர்த்து போராடுவது பற்றியும், கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
    லண்டன்:

    இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தில் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் ஜி-7 மாநாடு இதுவாகும்.

    மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘‘உலகை மீண்டும் சிறப்பாக கட்டி அமைப்போம். 2008 பொருளாதார நெருக்கடியில் நடைபெற்ற தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது முக்கியம், சமத்துவமின்மையின் ஆறா வடுக்களை சமாளிப்பதும் முக்கியம்’’ என கூறினார்.

    அதனை தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அந்த வைரசை எதிர்த்து போராடுவது பற்றியும், கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது குறித்து ஜி-7 நாடுகளின் தலைவர்கள் தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

    இதையடுத்து கொரோனா போன்ற ஒரு தொற்று நோயால் ஏற்படும் பேரழிவு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தங்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்த ஜி-7 தலைவர்கள் உறுதி பூண்டனர்.

    இதுதொடர்பாக உலகளாவிய தொற்று நோய் எதிர்ப்பு செயல் திட்டம் ஒன்றை இந்த மாநாட்டில் வெளியிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தடுப்பூசிகளை உருவாக்க தேவையான நேரத்தை 100 நாட்களுக்குள் குறைப்பதே இந்த செயல் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஜி-7 நாடுகளின் இந்த செயல் திட்டம் தொற்று நோய்க்கு எதிராக தொடர்ச்சியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல் திட்டத்தின் சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

    * எந்தவொரு எதிர்கால நோய்க்கான தடுப்பூசிகள் சிகிச்சைகள் மற்றும் நோயறிதல்களை உருவாக்க மற்றும் உரிமம் பெற எடுக்கப்பட்ட நேரத்தை 100 நாட்களுக்குள் குறைத்தல்.

    * உலகளாவிய கண்காணிப்பு வலையமைப்புகள் மற்றும் மரபணு வரிசைமுறை திறனை வலுப்படுத்துதல்.

    * உலக சுகாதார அமைப்பை சீர் திருத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஆதரவு.

    இந்த செயல் திட்டம் தொழில் அரசு மற்றும் விஞ்ஞான நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட சர்வதேச வல்லுநர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில் ‘‘கடந்த ஆண்டில் உலகம் பல பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாகியுள்ளது, உரிமம் பெற்றது மற்றும் அவற்றை வேகத்தில் தயாரித்தது. இப்போது அவை தேவைப்படும் மக்களின் கைகளில் உள்ளது. ஆனால் கொரோனா வைரசை உண்மை யிலேயே தோற்கடிக்க இது போன்ற ஒரு தொற்றுநோய் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். அதாவது கடந்த 18 மாதங்களில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு அடுத்த முறை வித்தியாசமாக அதை செய்ய வேண்டும்’’ என கூறினார்.
    Next Story
    ×