search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தற்போதைய சூழலில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை - பாகிஸ்தான் தகவல்

    தற்போதைய நிலையில் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் உகந்த சூழல் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ‌ஷா மக்மூத் குரே‌ஷி கூறிள்ளார்.

    பதான்கோட்டில் கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் உரி ராணுவ முகாம் மீதான தாக்குதல், புல்வாமாவில் 40 வீரர்களை பலி கொண்ட தாக்குதல்களால் இரு நாட்டு உறவுகள் மேலும் மோசமடைந்தன.

    இந்த சூழலில், கா‌‌ஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு விலக்கிக்கொண்டதுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது தொடர்பாக சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்க்க முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து உறவுச்சிக்கல் நீடித்து வருகிறது.

    இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ‌ஷா மக்மூத் குரே‌ஷி நேற்றுமுன்தினம் முல்தானில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘தற்போதைய நிலையில் புறவழி அல்லது தூதரக ரீதியான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை. தற்போதைய நிலையில் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் உகந்த சூழல் இல்லை’ எனக் கூறினார்.
    Next Story
    ×