search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா ஊரடங்கு
    X
    கொரோனா ஊரடங்கு

    ஸ்பெயின் நாட்டில் 27-ந்தேதி முதல் ஊரடங்கில் இருந்து சிறுவர்-சிறுமிகளுக்கு விதிவிலக்கு

    ஸ்பெயின் நாட்டில் வருகிற 27-ந்தேதி முதல் சிறுவர்-சிறுமிகளுக்கு ஊரடங்கில் இருந்து தினமும் அரை மணிநேரம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டில் கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த மாதம் 14-ந்தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவின் தாக்கம் குறையாததால் அடுத்த மாதம்(மே) 9-ந்தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து, குழந்தைகள் மன நல நிபுணர்கள், பிரபல கால்பந்து வீரர்கள், நகர மேயர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  சார்பில் ஸ்பெயின் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக பொதுமக்களிடம் 55 ஆயிரம் மனுக்களும் பெறப்பட்டு பிரதமர் பெட்ரோ சான்சசிடம் அளிக்கப்பட்டது.

    அந்த கோரிக்கை மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    ஸ்பெயின் நாட்டில் உள்ள நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள்தான் அதிகம். பெரும்பாலான வீடுகளில் பால்கனி கூட கிடையாது. அதனால் ஊரடங்கின்போது வீடுகளில் குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் பராமரிப்பது மிகவும் சிரமாக உள்ளது.

    அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு முரட்டு சுபாவம் உள்ளவர்களாக மாறி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதும் கஷ்டமாக உள்ளது. எனவே அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படாமல் இருக்க குழந்தைகளுக்கு ஊரடங்கிலிருந்து தினமும் சிறிதுநேரம் விதிவிலக்கு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ

    இந்த நியாயமான கோரிக்கையை அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சசும் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார்.

    அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    வருகிற 27-ந்தேதி முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சிறிது நேரம் புத்துணர்ச்சி பெறும் விதமாக அவர்களை, வீட்டை விட்டு தினமும் பெற்றோர் அரைமணி நேரம் வெளியே அழைத்துச் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அப்படி போகும்போது 3 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். இது பெற்றோருக்கும் பொருந்தும்.

    மேலும் நடந்து செல்லும்போது குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே 2 மீட்டர் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்றவேண்டும்.

    குழந்தைகளை நீண்ட தொலைவுக்கு அழைத்து செல்லக்கூடாது. தங்களது தெருவுக்கு உள்ளேயே நடமாட்டம் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    பிரதமரின் இந்த அறிவிப்பை ஸ்பெயின் நாட்டின் அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

    அப்பாடா! என்று அத்தனை பெற்றோரும் சற்றே நிம்மதி பெரு மூச்சும் விட்டுள்ளனர்.
    Next Story
    ×