search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி
    X

    பிரான்ஸ் - இந்திய விமானப்படையின் ரபேல் தயாரிப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

    இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பணிகளை கண்காணிக்கும் இந்திய விமானப்படையின் பிரான்ஸ் அலுவலகத்தில் கொள்ளையடிக்க சிலர் முயன்றனர்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம்  இருந்து இந்திய அரசு 59 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்கிறது.

    உரிய காலத்துக்குள் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும் பணிகளை கண்காணிக்கவும், இந்த போர் விமானங்களை பராமரிப்பது மற்றும் ஓட்டுவதற்காக இந்திய விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் இந்திய விமானப்படை சார்பில் தற்காலிக அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.

    பாரிஸ் அருகே செயின்ட் கிலவுட்ஸ் பகுதியில் டசால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் விமானப்படை கேப்டன் அந்தஸ்த்திலான ஒரு அதிகாரி தலைமையில் இந்திய விமானப்படையை சேர்ந்த சிலர் இங்கு தங்கியுள்ளனர்.



    இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து சில மர்மநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை முயற்சியாக கருதப்படும் இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த கணினி தகவல்கள் உள்ளிட்ட ஏதும் களவாடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×