search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவின் சரக்கு கப்பலை கைப்பற்றியது, அமெரிக்கா
    X

    வடகொரியாவின் சரக்கு கப்பலை கைப்பற்றியது, அமெரிக்கா

    சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வட கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது.
    வாஷிங்டன்:

    வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை முழுமையாக கைவிடவேண்டுமென்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீது உள்ள பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல சர்வதேச தடைகளில் இருந்து விலக்கு மற்றும் நிவாரணம் கோருகிறது வடகொரியா.

    இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசினர். இருநாட்டு தலைவர்களின் இந்த 2-வது சந்திப்பு எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் முடிந்தது.

    இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையிலான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் 4-ந் தேதி குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய பல ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது.

    வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவை அதிரவைத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்தது.

    அணு ஆயுத பேச்சுவார்த்தையில் தங்களுக்கு சலுகைகள் வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் தரவே வடகொரியா இந்த சோதனைகளை நடத்தியதாக பார்க்கப்படு கிறது.

    வடகொரியாவின் இந்த ஆயுத சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், “இந்த சோதனைகளால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும், அது குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இன்னமும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை என்றே நான் எண்ணுகிறேன்” என கூறினார்.

    இந்த நிலையில், சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வடகொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. வடகொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டு செல்ல இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த போக்குவரத்து ஐ.நா.வின் ஏற்றுமதி தடையை மீறியுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

    வைஸ் ஹானஸ்ட் என பெயர் கொண்ட இந்த கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவில் சிக்கியது. அதனை தொடர்ந்து, இந்த கப்பலை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா தரப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்தோனேசியா தற்போது வடகொரியாவின் வைஸ் ஹானஸ்ட் சரக்கு கப்பலை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்கும், இந்த கப்பலை கைப்பற்றியதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×