என் மலர்
செய்திகள்

X
புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் கண்டனம்
By
மாலை மலர்15 Feb 2019 6:11 PM IST (Updated: 15 Feb 2019 6:42 PM IST)

காஷ்மீர் மாநிலத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர், இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #WhiteHouse #AfghanPresident #IsraelPM #PulwamaAttack
ஜெருசலேம்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து, மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது.
டெல்லியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
இதைதொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தது.
தெற்காசிய பகுதியில் பீதியையும், வன்முறைகளையும், குழப்பத்தையும் அதிகரிக்கச் செய்யும் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் நடவடிக்கையையும், தங்களது மண்ணில் பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் செயலையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்.

புல்வாமா தாக்குதலை போன்ற கொடூரமான செயல்கள் வன்முறையை நசுக்கும் அமெரிக்கா-இந்தியா இடையிலான கூட்டு நடவடிக்கைக்கு சாதகமாக அமையும் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் சாரா சான்டெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்டோரும் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானால் தூண்டி விடப்படும் பயங்கரவாதம் தெற்காசிய பிராந்தியத்தில் புற்றுநோயாக மாறி வருவதாகவும், இந்த பயங்கரவாதிகளை அழிப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள அஷ்ரப் கானி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார்.
கொடூரமான இந்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் பலியான சம்பவத்துக்கு இஸ்ரேல் நாட்டு மக்களின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, துயரமான இந்த வேளையில் இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். #WhiteHouse #AfghanPresident #IsraelPM #PulwamaAttack
Next Story
×
X