search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை - கூட்டணி இன்னிங்ஸ் ஆட இம்ரான்கான் ரெடி
    X

    ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை - கூட்டணி இன்னிங்ஸ் ஆட இம்ரான்கான் ரெடி

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ள இம்ரான்கானின் கட்சி, பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறது. #PakistanElection #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து கடந்த புதன் கிழமை தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. 

    வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. எனினும், 50 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டதும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் ஓட்டு எண்ணப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தல் முடிவை ஏற்கப்போவதில்லை என அறிவித்தன. தேர்தலில் குளறுபடி நடந்து இருப்பதாக குற்றம் சாட்டின. 


    உலகக்கோப்பை வென்ற கேப்டனாக இம்ரான்கான்

    இதற்கிடையே நிறுத்தப்பட்ட ஓட்டு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. தற்போது வரை 95 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளன. இம்ரான்கானின் பிடிஐ கட்சி 115 இடங்களிலும், பாக். முஸ்லிம் லீக் கட்சி 62 இடங்களிலும், பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அறிவித்தாலும், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக பாடுபட தயார் என பாக். முஸ்லிம் லீக் கட்சி கூறியுள்ளது. இதனால், இம்ரான்கான் பிரதமராவதற்கு எந்த பிரச்சனையும் இல்லாத நிலை உள்ளது.

    எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகள் தேவை. ஆனால், இம்ரான்கானின் வசம் தற்போது 115 தொகுதிகள் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முழுவதும் முடிந்தாலும், அவருக்கு இன்னும் கூடுதலாக 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனினும், 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உடனான பேச்சுவார்த்தையை அவர் மேற்கொண்டு வருகிறார். சுமார் 15 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் வளைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    8 எம்.பி.க்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான்கான் சந்தித்து பேசி வருகிறார்.


    கூட்டணி பேச்சுவார்த்தையில் இம்ரான்கான்

    தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராணுவமும் இம்ரான்கானின் பக்கம் நிற்பதால், அவர் ஆட்சியமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

    இந்த நம்பிக்கையில் தான் மந்திரிசபையில் யார் யாருக்கு இடம், அரசின் முக்கிய பதவிகள் யாருக்கு? போன்றவை குறித்தும் அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் விவாதித்து வருகிறார். பிரதமராக அவர் தனது இன்னிங்சை தொடங்கியதும் பல சவால்கள் காத்திருக்கின்றன.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டியதில் அமெரிக்காவின் அச்சுறுத்தல், எல்லை பாதுகாப்பு, பொருளாதார சரிவு ஆகிய பல பிரச்சனைகளை அவர் உடனே சரிசெய்ய வேண்டிய சூழல் அவசியமாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு மாறாக பஞ்சாப் மாகாண சபை தேர்தலில் இம்ரான்கான் கட்சியை விட நவாஸ் ஷரீப் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. எனினும், ஷரீப் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை மடக்கி அங்கும் ஆட்சியமைக்க இம்ரான்கான் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
    Next Story
    ×